இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடுத்தவர்களில் சிலர் இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர். வேறு சிலர், தேர்வை ரத்து செய்யக்கூடாது; மறு தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்தன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை தொடர்பானது என்பதால், இதில் உறுதியான மற்றும் இறுதி முடிவை வழங்குவதற்கான அவசரத் தேவை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் இறுதி முடிவுகள் தற்போதைய கட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றன. நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சில காரணங்கள் உள்ளன. நீட் இளநிலை தேர்வு வினாத்தாள்கள் ஹசாரிபாக் மற்றும் பாட்னாவில் கசிந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்துள்ளதாக அது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் சிபிஐ கூறி இருக்கிறது.
நீட் வினாத்தாள் பரவலாக கசியவில்லை என்ற சென்னை ஐஐடி-ன் அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய தரவுகளை நீதிமன்றம் சுயமாக ஆய்வு செய்துள்ளது. பதிவேட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில், தற்போதைய நிலையில், தேர்வின் முடிவு மோசமாக உள்ளது மற்றும் தேர்வின் புனிதத்தன்மைக்கு திட்டமிட்ட ரீதியில் மீறல் நடந்துள்ளது என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் இல்லை.
மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் அது 23 லட்சம் மாணவர்களுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை அட்டவணையில் சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும், எதிர்காலத்தில் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அரசு கூறியது. மேற்கண்ட காரணங்களுக்காக, இளநிலை நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.