உதய் மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது அதிமுக அரசு, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்விற்கு அதிமுக அரசே காரணம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கூறியதாவது:-
2017ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உதய் மின் திட்டத்தில் அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் கையெழுத்திட்டு தமிழகத்தையும் இணைத்து கொண்டார். அதன்பிறகு தான் மின்சாரக் கட்டணம் ஒவ்வொரு வருடமும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை முறையாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-12ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்த போது மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நிதி இழப்பு 18,954 கோடி ரூபாயாக இருந்தது. அதன்பிறகு அதிமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகம் காரணமாக நிதி இழப்பானது 94,312 கோடி ரூபாயாக அதிகரித்தது. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்கும் போது ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடி ரூபாயாக நிதி இழப்பு இருந்தது.
இதற்கு காரணம் அதிமுக அரசு. 2021-22ஆம் நிதியாண்டில் இருந்து மேற்சொன்ன நிதி இழப்பை 100 சதவீதம் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிதி இழப்பை முந்தைய அரசு வழங்காத காரணத்தால் மின்சாரத் துறைக்கு இருந்த கடன் மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக வந்துள்ளது. இந்த கடனுக்கு வட்டி கட்ட வேண்டும் அல்லவா?
2011-12ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது 4,588 கோடி ரூபாயாக இருந்த வட்டி 259 சதவீதம் அதிகரித்து 16,511 கோடி ரூபாய் அதிகரித்தது. இவ்வாறு நம்முடைய மின்வாரியத்தின் நிதியை மிக மோசமான நிலையில் வைத்திருக்கிறார்கள். இத்தகைய நிதி நெருக்கடியை சரிகட்டுவதற்காக தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு மிகக் குறைவாக தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் குறைவான மின் கட்டணம் இருந்து வருகிறது.
அதிமுக ஆட்சியிலும் அடுத்தடுத்து உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபோன்ற விஷயங்களை மறைத்து விட்டு, மின் கட்டண உயர்விற்கு எதிராக அதிமுகவினர் தற்போது போராடி வருகிறார்கள். இவற்றை சீரமைக்கும் வகையில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.