நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும் பாடவும் தான் தெரியும்: சுப்பிரமணியன் சுவாமி!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை விமர்சித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவிற்கு பதில் அளித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நிர்மலா சீதாராமனுக்கு பாடவும் ஆடவும் மட்டும்தான் தெரியும் என்று விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை பிரதமர் அலுலவகம் தயாரித்தது என்றும், அதில் நிர்மலா சீதாராமன் கையெழுத்து மட்டுமே போட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். 1959 முதல் 1964 வரை நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து, நிர்மலா சீதாராமன் ஏழு பட்ஜெட் உரைகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது சாதனை பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கும், அதற்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளித்திருப்பதாக கூறியுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “2024-2025 மத்திய பட்ஜெட், கிராமங்கள், ஏழைகள், விவசாயிகளை வளமையான பாதைக்கு அழைத்துச் செல்லும். Advertisement புதிய நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் தொடர் நடவடிக்கையாக இந்த பட்ஜெட்டை பார்க்க வேண்டும். இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளை அளிக்க போகிறது. நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும். சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் அதிகாரம் அளிக்கும் தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்டாக இருக்கிறது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்துக்கு பாதை அமைக்கும். கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். நடுத்தர வர்த்தகத்துக்கு புதிய பலம் அளிக்கும். பழங்குடியினர், தலித், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வலிமையான திட்டங்களை கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பொருளாதார பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது” என்று பாராட்டினார்.

ஆனால் எதிர்க்கட்சிகளோ இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆந்திரா, பிகாருக்கு மட்டுமே பட்ஜெட் போடப்பட்டிருப்பதாக விமர்சித்து இருந்தார்கள். மேலும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், மாத சம்பளம் வாங்குவோருக்கு ஏமாற்றம் தரும் விஷயம் எனறு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் ஜெகதீஷ் ஷெட்டி என்பவர் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தொழிலதிபர்கள், சம்பளம் வாங்கும் வர்க்கம், நடுத்தர வர்க்கம் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் ஆகியோரின் வாக்காளர்களுக்கு இது ஒரு ஏமாற்றம் அளிக்கும். எதிர்பார்த்தபடியே இந்த அரசாங்கத்திற்கு பொருளாதாரம் குறித்த முன்னுரிமைகள் எது அல்லது பயணிக்க வேண்டிய திசைகள் பற்றிய புரிதல் இல்லை.. சுருக்கமாக சொன்னால் பாஜக மீதான கோபமும், வெறுப்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

இவரது பதிவிற்கு பதில் அளித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நிச்சயமாக நிதியமைச்சர் (நிர்மலா சீதாராமன்) மீது குற்றம் சாட்டுவது கடினம். ஏனென்றால் பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டது, ஆனால் முட்டாள்கள் அதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையொப்பத்திற்காக அனுப்பினர். அவர் ஜேஎம்யூ முன்னாள் மாணவி, அவருக்கு பாடவும் ஆடவும் மட்டுமே தெரியும் என்று காட்டமாக கூறியுள்ளார். இதற்கு பாஜகவினர் அவரது பதிவிலேயே கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.