அம்மா உணவகத்தில் பேதம் பார்க்கவில்லை என்று திமுக கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மக்கள் விரோத போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக இன்றைக்கு(நேற்று) தமிழக முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, கழக அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களிலே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுரை எழுதுவதற்காக பொதுமக்களும், கழகத் தொண்டர்களோடு இணைந்து தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கின்ற என் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வருடம் தோறும் நிதிநிலை அறிக்கை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வருடம் தோறும் மின்சார கட்டண உயர்வை இப்போதுதான் இந்த தமிழகம் பார்க்கிறது. மூன்றாண்டுகளிலே மூன்று முறை இந்த அரசில் மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றி இருக்கிறது. இன்றைக்கு மின் கட்டண உயர்வால் சிறு,குறுதொழில்கள் முடங்கும் அபாயம் உள்ளது. மின்கட்டணம் உயர்வால் மின் கட்டண உயர்வு அதன் மூலம் விலைவாசி உயர்வு என மக்களுக்கு இரட்டை சுமை ஏற்பட்டுள்ளது. மின்சார சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளனர் இதை கைவிடப்பட வேண்டும்.
இன்றைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது குறிஞ்சி இல்லத்தில் விருந்து வைப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். 234 சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் கட்சிக்காரர்களுக்கு விருந்து அளிப்பது எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால் அவர்கள் கட்சிக்காரர்களுக்கு சைவ, அசைவ விருந்தை வைத்துவிட்டு மக்களுக்கு மின்சார கட்டணம் உயர்வு என்கிற விஷத்தை கொடுக்கிறீர்களே இது நியாயமா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.
அம்மா உணவகத்தை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஞானோதயம் பிறந்தது போல ஆய்வு செய்யவந்தது என்ன காரணம்? பேதம் பார்க்கவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக, பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டு போல திமுகவினர் பேசி வருகிறார்கள். அம்மாவின் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தீர்கள், அம்மா திட்டமான மடிக்கணினி திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கவில்லை, உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகன திட்டத்தை நிறுத்திவிட்டீர்கள், கறவை மாடு ஆடுகள் திட்டத்தை நிறுத்தி விட்டீர்கள். எடப்பாடியார் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டீர்கள்.. இப்படி அம்மா ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் கஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா கிடப்பில் போட்டு விட்டீர்கள்.
அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என்று ஆயிரம் ஆயிரம் திட்டங்களை எங்களால் பட்டியலிட்டு சொல்ல முடியும். இது போன்ற திட்டங்களை நீங்கள் எப்படி சிதைத்தீர்கள் என்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். பேதம் பார்க்கவில்லை என்று சொன்னால் அதை ஒருநாளும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாத்தான் வேதம் ஓதுவதை போலத்தான் இது பார்க்கப்படுகிறது. இந்த மின்சார கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயம் வெற்றி பெறும் .இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயம் வெற்றி பெறும் ஸ்டாலின் வீட்டுக்கும், எடப்பாடியார் கோட்டைக்கு செல்வது நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.