தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியினை பெற வேண்டுமென்றால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பாரதப் பிரதமரின் தலைமையில் 27-07-2024 அன்று புது டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது என்பது தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். நிதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணிக்கும் முடிவு தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான செயல் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
மத்திய ஆட்சியில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இந்த 17 ஆண்டு காலத்தில், கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவோ, வரிப் பகிர்வினை கூடுதலாக தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரவோ, தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதியைப் பெற்றுத் தரவோ எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்காமல், வளமான இலாகாக்களை பெறுவதிலேயே குறியாக இருந்தது தி.மு.க. இன்னும் சொல்லப் போனால், பைக்காரா புனல் மின் திட்டத்தை தாமதப்படுத்தியது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை தடுத்து நிறுத்தியது என துரோக நடவடிக்கைகளை மட்டுமே தி.மு.க. மத்திய ஆட்சியில் இருந்தபோது செய்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தன்னலத்திற்காக பல முயற்சிகளை எடுத்த கட்சி தி.மு.க.
ஆனால், தற்போது தமிழ்நாட்டிற்கான திட்டங்களைத் தர மத்திய அரசு தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்காக 6,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட ஏழு மடங்கு அதிகம் என்றும், ரெயில்வே திட்டங்களுக்கான நிலங்களை ஒதுக்குவதில் தி.மு.க. அரசு காலதாமதம் செய்கிறது என்றும், ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரெயில் பாதையை கைவிடுமாறு தி.மு.க. அரசு கோரியுள்ளதாகவும், சாலை அமைக்கும் பணிகளிலும் நிலங்களை கையகப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கினை கடைபிடிப்பதாகவும் மத்திய ரெயில்வே அமைச்சர் கூறி இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் கருத்துகளை எடுத்துரைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையானதை கேட்டுப் பெறுவதே பொருத்தமாக இருக்கும். இதைவிடுத்து, நிதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணிப்பது என்பது தவறான நடவடிக்கையாகும்.
உதாரணமாக, முல்லைப் பெரியாறு குறித்து ஆராய ஐவர் குழுவை 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசனப் பிரிவை அமைத்தது. இந்தக் குழுவில் மத்திய அரசு சார்பில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களும், தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும், கேரள அரசின் சார்பில் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் குழுவில் தமிழ்நாடு இடம்பெறாது என்ற அறிவிப்பினை வெளியிட்டது தி.மு.க. இது ஒரு தவறான நடவடிக்கை. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாட்டினைக் கண்டித்து ஜெயலலிதா விரிவான அறிக்கையினை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஓர் உத்தரவினை பிறப்பித்திருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டின் சார்பில் பிரதிநிதி நியமிக்கப்படவில்லை என்றால், கேரள அரசின் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா என்று வினவியிருந்தார். அதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் நியமிக்கப்பட்டார். பின்னர், இந்த வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பு 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்டது.
இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை, தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியினை நாம் பெற வேண்டுமென்றால், பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு தேவையானவற்றை அங்கே ஆணித்தரமாக முன்வைத்து அவற்றை பெற்றிட முதல்-அமைச்சர் முன்வர வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுதான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.