“உதயநிதி ஸ்டாலினை விட சீனியரான கனிமொழிக்கு துணை முதலமைச்சர் பதவியை முதல்வர் ஸ்டாலின் கொடுக்கலாமே.. ஆனால் அதை அவர் செய்ய வாய்ப்பே இல்லை. இதுதான் திமுகவின் பெண்ணுரிமை” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை முழுவதுமாகவே வாஷ் அவுட் ஆயின. இந்த நாடாளுமன்றத் தேர்தல் தந்த வெற்றியானது திமுகவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த தேர்தல் வெற்றிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் முக்கிய காரணம் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். எனவே அவரது உழைப்பை அங்கிகீரிக்கும் வகையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று திமுகவின் நிர்வாகிகள் முதல் சீனியர் அமைச்சர்கள் அவரை பகிரங்கமாக பேசி வருகின்றனர். எனவே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி விரைவில் வழங்கப்படலாம் என பேச்சுகள் அடிபடுகின்றன.
எனினும், இதை உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் இதுதொடர்பாக வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் திமுகவினரை அவர் அண்மையில் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், இளைஞரணி செயலாளர் என்ற பதவியே தனக்கு போதுமானது என்றும், அதற்கு மேல் எந்த பதவியும் வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி நிச்சயம் வழங்கப்படும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
திமுகவில் நேற்றைக்கு சேர்ந்த உதயநிதி ஸ்டாலினுக்கு சீனியர் அமைச்சர்களே துதிப்பாடி வருகின்றனர். ஜூனியர் அமைச்சர்கள் பாடினால் கூட பரவாயில்லை. உதயநிதியின் புகழை பாடாமல் சீனியர் அமைச்சர்களே கட்சியில் நீடிக்க முடியாது என்கிற நிலைமை தான் திமுகவில் உள்ளது. வாரிசு அரசியலுக்கு இந்தியாவிலேயே சிறந்த உதாரணமாக இருக்கும் திராவிட முன்னற்றக் கழகத்தில் இருந்து நம்மால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் தங்கள் பிள்ளைகளை அடுத்தக்கட்டமாக எம்.பிக்களாக ஆக்குகிறார்கள். அப்படியென்றால் முதல்வரின் மகன் துணை முதல்வரானால் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அதனால் அதற்கான வேலைகள் நடக்கின்றன. திமுகவை பொறுத்தவரை அதன் முதலிடம் கோபாலபுரத்துக்கு சொந்தமானது. வேறு யாரும் அந்த இடத்துக்கு வர முடியாது. பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய பேசுகிறார்களே.. முதல்வரின் தங்கை கனிமொழி, உதயநிதியை விட சீனியர் தானே. அவர்களின் அரசியல் அனுபவம் பெரியது. அப்படியிருக்கும் போது கனிமொழிக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க வேண்டியதுதானே.. கொடுக்க மாட்டார்கள். இதுதான் திமுகவின் பெண்ணுரிமை. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.