நிதி ஆயோக்கில் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா?: மு.க. ஸ்டாலின் கண்டனம்!

ஒரு மாநில முதல்வரான மம்தா பானர்ஜியை, நிதி ஆயோக் கூட்டத்தில் இப்படித்தான் நடத்துவதா என மத்திய பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தான் 5 நிமிடங்கள் பேசியதும் மைக் அணைக்கப்பட்டதால் அங்கிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாதியில் வெளியேறிய நிலையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இதுதான் கூட்டாட்சி தத்துவமா? மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கி அவர்களை எதிரிகளை போல் நடத்தக் கூடாது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைவரது கருத்துகளுக்கும் உரையாடல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளிலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என கூறி அந்த கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.