சிவகங்கை தொகுதியில் திமுக வேலை செய்யாவிட்டால் மக்களவைத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெபாசிட் கிடைத்திருக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் கடந்த 20-ம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி சிதம்பரம் எம்.பி, மக்கள் பிரச்சினைகளை துணிச்சலாகத் தெரிவிக்க வேண்டும். கூட்டணி தர்மம் என்று கூறி கூனி குறுகி இருக்கக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பேசினால்தான் நமக்கு தனித்துவம் இருக்கும்.2026 சட்டப்பேரவைத் தேர்தல், காங்கிரஸுக்கு முக்கியமான தேர்தல். அப்போது அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும்.அப்போதுதான் காங்கிரஸ் தமிழகத்தில் நிலைத்திருக்கும். அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் இதுதொடர்பான கேள்விக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பதிலில் கூறியதாவது:-
காங்கிரஸ் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்று கார்த்தி சிதம்பரம் தேர்தலுக்கு முன்பு அறிவித்திருக்கலாம். எம்.பி.யாக வெற்றி பெற்று, மக்களவையில் அமர்ந்தபிறகு பேசுவது நியாயமில்லை. அவர் வெற்றி பெறுவதற்கு கூட்டணி வேண்டும். விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸார் வெற்றி பெறக்கூடாது என்று நினைப்பது சுயலாபம் கருதிதான்.
சிவகங்கையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் டெல்லி சென்று கார்த்தி சிதம்பரத்துக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு தரக்கூடாது என்று முறையிட்டனர். ப.சிதம்பரத்தின் செல்வாக்கால்தான் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு முழுக்க திமுகதான் உழைத்தது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் வேலைசெய்யவில்லை. வாக்காளித்தார்களா என்றேகூட தெரியவில்லை. அத்தொகுதியில் திமுக வேலை செய்யாமல் இருந்திருந்தால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் பெறுவதே பெரிய விஷயமாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.