மோடி தமிழ்நாட்டிற்காக எந்தவொரு நல்லதையும் செய்ய மாட்டார் என்று திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், மத்திய பட்ஜெட் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூட்டணிக் கட்சிகளான தெலங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திரா, பிகார் மாநிலங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இன்றைக்கு பாஜக தலைமையிலான அரசு, மத்தியில் ஆட்சியில் இருப்பதற்கு மேற்குறிப்பிட்ட இரு கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் அந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அவற்றை தவிர, பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பெரிய அளவில் எந்த திட்டங்களும், நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, இந்த பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டின் பெயர் கூட உச்சரிக்கப்படவில்லை. இதன் காரணமாக, மத்திய பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற திமுக போராட்டத்தில் அத்தொகுதி எம்.பி. கனிமொழி பேசியதாவது-
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டிருந்த போது, நாடாளுமன்றத்தில் இருந்த எங்களுக்கு எல்லாம் ஒரு சந்தேகம் வந்தது. நாம் டெல்லியில் நாடாளுமன்றத்தில் தான் இருக்கிறோமா.. இல்லையென்றால் பிகார், ஆந்திரா சட்டமன்றத்தில் இருக்கிறோமா என்கிற சந்தேகம் வந்தது. அந்த அளவுக்கு, நாட்டின் பிற மாநிலங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டு அந்த இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஒரு பட்ஜெட்டை பாஜக அரசு தயாரித்து இருக்கிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் தயவு வேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது.
அதுவும் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. இதுவே தேர்தல் வந்துவிட்டால் போதும்.. பிரதமர் மோடி முதலில் வரும் மாநிலம் தமிழ்நாடாக தான் இருக்கும். இங்கு வந்து நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே.. தமிழ் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுவார். ஆனால் தமிழ்நாட்டிற்காக எந்தவொரு நல்லதையும் செய்ய மாட்டார். இவ்வாறு கனிமொழி கூறினார்.