இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பான தகவல்களைப் பெறத் தான் முயன்று வருவதாகவும் இருப்பினும் மோடி அரசு நீதிமன்றத்தில் அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இதை மத்திய பாஜக அரசு தொடர்ந்து மறுத்தே வருகிறது. இதற்கிடையே இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
சமீபத்தில் லடாக்கில் சர்ச்சைக்குரிய 4064 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த உண்மையை நான் பெறுவதை மோடி அரசு நீதிமன்றத்தில் ஏன் என்னைத் தடுக்கிறது? மக்களுக்குத் தெரிந்துகொள்ள உரிமை உள்ளது. நேரு குடும்பத்தினர் சீனாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதால் காங்கிரஸ் இந்த விஷயத்தை எழுப்பவில்லை.. இந்த ஒப்பந்தத்தில் மோடி இருக்கிறார்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2022 நவம்பர் மாதம், சுப்பிரமணியன் சுவாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.. 1996ஆம் ஆண்டில் பரஸ்பரம் ஒப்புக் கொண்ட உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு எல்லையில் சீனா எந்தளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்ற தகவல்களைப் பகிருமாறு அவர் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டார். மேலும், 2014க்கு பிறகு இந்தியா தனது இறையாண்மைக்கு உட்பட்ட நிலத்தில் எவ்வளவை இழந்துள்ளது என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த 2023 அக். மாதம் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டிலும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்திய நிலப்பரப்பில் சீன அத்துமீறல் குறித்த விவரங்களைக் கோரிய தனது விண்ணப்பத்திற்கு மத்திய அரசு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறிவிட்டதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், சுப்பிரமணியன் சுவாமி தொடர்ச்சியாகப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தே வருகிறார். கடந்த ஜூலை 16ம் தேதி காஷ்மீரின் தோடாவி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தில் அவர் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கடுமையாகச் சாடினார். அப்போதே இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “எங்கள் பாதுகாப்பு அமைச்சரும் கண்ணியமான மனிதருமான ராஜ்நாத் சிங், எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது வருத்தமளிப்பதாகக் கூறுகிறார். ஆம், வேறு அவரால் என்ன செய்ய முடியும்.. அங்கே யாரும் உயிரிழக்கவில்லை என்று மோடி சொல்லிவிட்டார் போல..” என்று சாடியுள்ளார்.