லெபனானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுரை!

தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம் என்று பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு, ஹமாஸுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதன் காரணமாக அந்த அமைப்பு இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இஸ்ரேலை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வீசியுள்ளது.

கடந்த 27-ம் தேதி இஸ்ரேலின் கோலன் குன்றுகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ராக்கெட் குண்டு கால்பந்து விளையாட்டு மைதானத்தில் விழுந்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு முகாம்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம். இதேபோல இந்தியாவில் இருந்து யாரும் லெபனான் வர வேண்டாம். அவசர உதவி தேவைப்படுவோர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதர கத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.