சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.92 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற மூன்று பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள் . அதில் ஒருவர் திமுகவைச் சேர்ந்தவர் என தெரியவந்திருக்கும் நிலையில், இதுகுறித்து பதிலளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடமைப்பட்டுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு, பல லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்படுவதாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், கையில் பையுடன் ஒருவர் நின்று இருந்தார். அவரை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 5 கிலோ 970 கிராம் கொண்ட உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் இருந்தது. விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மத் என்றும், ராமநாதபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றது தெரியவந்தது.
அவர் அளித்த தகவலின் படி, செங்குன்றம் பகுதியை சேர்ந்த மன்சூர் மற்றும் இப்ராஹிம் ஆகிய 2 நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்து 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ 920 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் கும்பலை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவினர் பெருமளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.92 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற மூன்று பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். இவர்களில், ராமநாதபுரம் மாவட்டம் திமுக சிறுபான்மை அணி துணைத்தலைவர் இப்ராஹிம் என்பவர் ஒருவர் எனத் தெரிய வருகிறது. சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக், திமுக நிர்வாகியாகப் பதவியில் இருந்ததும், தற்போது மற்றுமொரு திமுக நிர்வாகி, மிகப்பெரும் அளவிலான போதைப்பொருள்களைக் கடத்த முயற்சி செய்திருப்பது, தலைநகர் சென்னையில் நடைபெற்றிருப்பதும், அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. உண்மையில் இந்தக் கும்பலுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும், இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப் பொருள்கள் புழக்கம் பெருமளவு அதிகரித்திருப்பதும் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. திமுகவினர் பெருமளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது குறித்து, முதலமைச்சர் திரு.ஸ்டாலின் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.