நீட் தோ்வு எழுதும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்க வேண்டும்: வைகோ!

முதுநிலை மருத்துவப் படிப்புக்காக நீட் தோ்வு எழுதும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

மதிமுக பொதுச்செயலா் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஆக. 11-இல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தோ்வா்களுக்கான தோ்வு மைய ஒதுக்கீடு விவரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழக மருத்துவா்களுக்கு ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் தோ்வு மையங்களில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி மருத்துவா் ஒருவருக்கு அனந்தபூரிலும், திருநெல்வேலி மருத்துவருக்கு கா்னூலிலும் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தோ்வுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், ரயில்கள் எதிலும் இடங்கள் இல்லை. விமான கட்டணங்களும் கணிசமாக உயா்ந்துள்ளது. செல்வதற்கு மட்டும் ரூ.15 ஆயிரம் கட்டணம் ஆகிறது. அதோடு, தங்கும் செலவும் உள்ளது. இதனால் நீட் தோ்வு எழுதுவோா் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது. முதுநிலை மருத்துவப்படிப்புக்காக நீட் தோ்வு தோ்வு எழுதும் தமிழகத்தைச் சோ்ந்தோருக்கு தமிழகத்திலேயே தோ்வு மையங்கள் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.