கர்நாடகா காங்கிரஸிடம் துரைமுருகன் காசு வாங்கிவிட்டாரா?: அண்ணாமலை

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டிக்காததை பார்த்தால் அவர்களிடம் காசு வாங்கிவிட்டாரோ என சந்தேகம் ஏற்படுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

காவல் துறை மீதான அச்சம் போய்விட்டதால்தான் நாள்தோறும் 15 கொலை நடைபெறுகிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு போலீஸாரின் கைகள் கட்டப்பட்டதே காரணம். போலீஸ் ஸ்டேஷனில் போலீஸார் வேலை செய்வதில்லை. அதிக கொலை நடப்பதுதான் எங்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது தெளிவாகி உள்ளது. கொலை தொடர்பாக கேள்வி எழுப்பினால், முன் விரோத கொலைகளை எப்படி தடுக்க முடியும் என கேட்கிறார். இப்படி ஒரு பதிலை முதல்முறையாக கேள்விப்படுகிறேன். அமைச்சரின் இந்த பதிலை கேட்டு சிரிப்பதா இல்லை அழுவதா என தெரியவில்லை.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக துரைமுருகன் கூறுகிறார். ஆனால் கர்நாடகா காங்கிரஸை விமர்சிக்காததை பார்த்தால் துரைமுருகன், அவர்களிடம் காசு வாங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. குறைந்தபட்சம் அறிக்கையும் விடவில்லை. கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் சொன்னது தவறு என சொல்லி திமுகவும் அறிக்கை விட்டது கிடையாது. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று விமர்சனமும் செய்யவில்லை. கர்நாடகாவில் திமுகவினருக்கு தொழில் உள்ளது. விமர்சித்தால் அதற்கு பாதிப்பு வரும் என அஞ்சுகிறார்கள். காங்கிரஸ் அரசு செய்யும் தப்பை ஏன் திமுக கேட்கவில்லை என மக்கள் நினைக்கிறார்கள். மழை பெய்து காவிர நீர் வருவதால் அது குறித்து யாரும் பேசவில்லை. இந்த காவிரி பிரச்சினை இனி அடுத்த ஆண்டுதான் வரும். மிகப் பெரிய வியாதியே மறதிதான். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.

சமூக வலைத்தளங்களில், திமுக அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது. காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைக் காக்க இனியும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில், கையாலாகாத முதல்வர் என்றே அறியப்படுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.