தமிழகத்திற்கு நிதி அளிக்கவில்லை என திமுகவினர் பொய்யை பரப்பி வருகிறார்கள்: எச்.ராஜா!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது அதை மறைத்து திமுகவினர் பொய் பரப்பி வருகிறார்கள் எனவும், எம்பி தயாநிதி மாறன், கனிமொழி மக்களை வரி கட்ட வேண்டாம் என்றால் முடிந்தால் சொல்லட்டும் என சவால் விடுகிறேன் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஐடி பிரிவு துணைத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாஜக எச்.ராஜா கூறியதாவது:-

ஒரு நாளைக்கு நான்கு கொலை நடக்கிறது. இதுதான் ஸ்டாலின் அரசாங்கம். நீங்க பாத்திங்கன்னா நமக்கு ஒரு சட்ட அமைச்சர் இருக்காரு. எங்க ஊருக்காரர். அவர் பெயர் ரகுபதி. அவர் என்ன சொல்றாரு.. அதெல்லாம் கொலை எல்லாம் நடக்கும்.. நம்ம கவுண்டமணி மாதிரி.. அதெல்லாம் சகஜமப்பா அப்படின்னு மந்திரி சொல்றாரு. உடனே நீங்க நம்ம சபாநாயகர் ஒருத்தர் இருக்காரு. அவரும் கொலையை எல்லாம் தடுக்க முடியாது. கைது செய்வது தான் முக்கியம்னு சொல்றாரு.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஆகவே இங்கு அரசியல் சட்டப்படி அரசாங்கம் நடக்கலேன்னு ஆளுநர் ஒரு வரி ரிப்போர்ட் அனுப்பினாருன்னா இந்த அரசாங்கம் இல்லை.

ஆர்டிகள் 356 சட்ட நிலையைச் சொல்றேன். நான் இந்த அரசாங்கத்தை டிஸ்மிஸ் பண்ணுங்கன்னு கேட்கல. ஆளுநர் ரிப்போர்ட் அனுப்பலாம். அப்படி ரிப்போர்ட் அனுப்பினா 24 மணி நேரம் கூட இந்த அரசாங்கம் இருக்காது. இது அப்பாவு அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? ரகுபதி அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

நண்பர்களே பாராளுமன்றத்தில் இருந்து பேசுறாங்க. அது யாரு தயாநிதி மாறன். நிறைய சொல்றாங்க கேபிள் திட்டமெல்லாம் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. விசாரணையும் நடக்கிறது. நேற்றைய தினம் கவிஞர் கனிமொழியும் பார்லிமென்ட்ல பேசி இருக்கார். நான் என்ன சொல்கிறேன் என்றால், முதுகெலும்பு இருந்தால் துணிச்சல் இருந்தால் தைரியம் இருந்தால் நீங்க பாராளுமன்றத்தில் பேசியதை செயல்படுத்தனும் என்று சொல்லுங்க. மக்கள் வரி செலுத்த வேண்டாம் என்று நாங்கள் மக்களிடம் சொல்லுவோம்னு சொல்லு தீர்மானம் போடுங்க. திமுகல சொல்லவெல்லாம் வேண்டாம் தீர்மானம் போடுங்க. மறுநாள் திமுகவும் இல்லை. தமிழக அரசும் இல்லை. தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கறாங்களா இல்லையானு? பார்ப்போம் என்றார்.

அது தொடர்ந்து செய்தியாளர்களும் சந்தித்தபோது பேசிய அவர்,” மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அதை மறைத்து. தமிழகத்திற்கு நிதி அளிக்கவில்லை என திமுகவினர் பொய்யை பரப்பி வருகிறார்கள். 1967 ஆம் ஆண்டு பொய் சொல்லி தான் ஆட்சியை பிடித்தார் அண்ணாதுரை. எம்பி தயாநிதி மாறன், கனிமொழி மக்களை வரி கட்ட வேண்டாம் என்றால் முடிந்தால் சொல்லட்டும. ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன். வரி கட்டினால் மட்டுமே மாநிலத்திற்கு வரியை பிரித்துக் கொடுக்க முடியும். வரி கட்ட முடியாது என்று சொன்னால் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்றாகும். மேலும் கஞ்சா, சிகரெட், புகையிலை இது மாதிரியான கலாச்சாரங்கள் வந்ததற்கு திமுக தான் காரணம் கருணாநிதி அவர்கள் தான். தமிழ்நாட்டில் மது விலக்கை நீக்கி சாராயத்தை கொண்டு வந்தார். இதனால் திமுக திருந்த வேண்டும் என வன்மையாக எச்சரிக்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.