தேசியப் பேரிடராக அமைந்துள்ள மத்திய அரசு: கனிமொழி!

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்காத மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களுடன் கனிமொழி கூறியதாவது:-

எந்த பாதிப்பையும் தேசியப் பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தயாராக இல்லை. காரணம், அவர்களே ஒரு தேசியப் பேரிடராகத்தான் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது 7 நாள்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தோம் என அவர்கள்(மத்திய அரசு) சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்று நம்முடைய முதல்வர் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதேநிலைதான் இன்றைக்கு கேரளத்தில்.. 7 நாள்களுக்கு முன்பே தகவல் தெரிவித்திருந்தோம், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அவையிலேயே தெரிவித்தார். ஆனால், அது உண்மைக்கு புறம்பானது என்பதை அடுத்த நாளே கேரள முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்திவிட்டார்.

பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவியும் செய்வதில்லை, அதே நேரத்தில் தகவல் தந்துவிட்டோம், முன்னெச்சரிக்கை செய்துவிட்டோம், ஆனால் மாநில அரசுகள் தயாராக இல்லை என திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வழக்கமாக அவர்கள்(மத்திய அரசு) செய்துகொண்டிருக்கிற ஒன்று.

நியாயமாக மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதியை கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் எவ்வளவு நாள் இழுத்தடிக்க முடியுமோ இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுப்போடுறவர்களுக்கு மட்டும் ஆட்சி நடத்தினல் அப்படித்தான். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.