கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் ராகுல், பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் அளித்துள்ளனர். இது குறித்து விமர்சித்துள்ள சீமான், ஏன் தூத்துக்குடி வெள்ளத்தின்போது இவர்கள் இருவரும் இங்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்டு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் தற்போதுவரை 300க்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை தொடக்கத்தில் 100-150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 340க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்த துயரம் குறித்து இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி, “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்களின் நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலையை தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் நேற்று வயநாடு சென்றிருந்தனர். அங்கு நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சூரல்மலைக்கு சென்ற அவர்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்களையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வயநாட்டில் ஏற்பட்டிருப்பது கொடுந்துரயம். அது ஏற்பட்டிருக்க கூடாது. இந்த துயரத்தில் நாங்கள் பங்கேற்கிறோம். இது ஒரு எச்சரிக்கை. ஆனால் கேரளா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசத்திற்கு விடுத்த எச்சரிக்கை என்று மட்டும் நினைக்க கூடாது. நமக்கும் இதுபோன்ற பாதிப்பு வராது என்று நிம்மதியாக இருக்க முடியாது. எனவே கவனமாக இருக்க வேண்டும். வயநாட்டிற்கு ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் ஓடி வந்து பார்த்தது மகிழ்ச்சிதான். உங்கள் தொகுதி என்பதால் ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கிறீர்கள், ஓடி வந்து பார்க்கிறீர்கள். ஆனால், நாங்கள் தூத்துக்குடியில் வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது எங்களை வந்து பார்க்கவில்லையே. எதுவுமே செய்யவில்லையே! அப்படியெனில் எங்கள் ஓட்டு வேண்டும், 10 சீட்டு வேண்டும், ஆனால் எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலை கிடையாது” என்று கூறினார்.