இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அன்புமணி கூறினார்.
திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடிக்கு விமான மூலம் வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காவிரி ஆற்றில் 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களுக்கு ஓராண்டு குடிநீர் தேவை 15 டிஎம்சி. நீர் மேலாண்மைக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசு, வார்த்தை ஜாலத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்வர் வரும் காலத்தில் காவிரியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். தமிழகத்தில் 5 கோடி மக்கள் காவிரியை நம்பி உள்ளனர்.
ஊழல் செய்வது, மின் கட்டணத்தை உயர்த்துவது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, கஞ்சா போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் கிடைக்கிறது என இதுதான் திராவிடம் மாடல். தமிழகத்தில் அன்றாடம் கொலை நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் 69 இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழகத்தில் 69 இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. உச்சநீதிமன்றம் இரண்டு முறை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தரவு சேகரியுங்கள் என்று கூறியும், வேண்டுமென்று கணக்கெடுப்பு நடத்தவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் சாதி வாரியாக கேட்பார்கள் என்று கணக்கெடுக்க பயப்படுகிறார். உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் முதல்வர் சாதி வாரி கணக்கு எடுத்திருப்பார். எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டமன்றத்தில் முதல்வர் பொய் பேசுகிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அருந்ததியர்களுக்கு பரிந்துரை செய்த ஜனார்த்தனன் குழு வன்னியர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
மின்சாரத் துறையில் ஊழல், லஞ்சம், நிர்வாக சீர்கேடு, நிர்வாகிக்க தெரியாத அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளனர். அரசு மின் உற்பத்தி செய்ய ரூ.3.40 ஆகிறது. ஆனால், தனியாரிடம் மின்சாரம் ரூ.12 முதல் ரூ.15 வரை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். இதுதான் திராவிட மாடலா? 17 ஆயிரம் மெகாவாட் மின் திட்டங்கள் 20 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது. 23 மாதத்தில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி அரசு திமுக அரசு. 33.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்கள் விரோத ஆட்சி.
இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது. தமிழக அரசுக்கும் அதிகாரம் இருக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக வடநாட்டில் நாட்டில் அதிகளவு மழை பெய்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் அரிவாள் கலாச்சாரம் வேதனை அளிக்கிறது. பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மாற்றம் கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காவல்துறைக்கு தெரியாமல் எந்தவொரு போதைப் பொருளும் விற்பனை செய்ய முடியாது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளது. திராவிட மாடல் என்று சொல்லி 3 தலைமுறையில் மக்களை குடிகாரனாக மாற்றி இருக்கிறார். நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குகிராரா? அல்லது முடியவில்லையா?
காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள். காவல்துறையில் உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யுங்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.