ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்: முத்தரசன்!

ஒரு நாட்டின் சமூக, பொருளாதார சூழல்களை சரியாக அடையாளம் காண மக்கள் தொகை கணக்கீடு மிகவும் முக்கியமானது; ஆகையால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் ஜாதியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோல பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் தலித் – பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உள் இடஒதுக்கீடு முறைக்கு நாட்டின் பல மாநிலங்களின் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து அண்மையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. தலித், பழங்குடிகளில் ஒரு சில பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான 3% இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கு தடை இல்லை என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அருந்ததியருக்கு பயனளிக்கும் வகையில் 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த உள் ஒதுக்கீட்டுக்கான சட்டம் செல்லும் என்று, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் ஒருமனதான தீர்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை வழங்குவதற்கு உள் ஒதுக்கீடு அவசியமானதாகும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், உரிய தரவுகளோடு ஒதுக்கீடு முறைமையை சரியாக சென்றடைய தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். 2020ல் நடத்தி இருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, கொரோனாவை காரணம் காட்டி மோடியின் மத்திய அரசு தள்ளிப் போட்டது. நான்கு ஆண்டு காலமாகியும் கணக்கீட்டை நடத்த மறுத்து வருகிறது. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார சூழல்களை சரியாக அடையாளம் காண மக்கள் தொகை கணக்கீடு மிகவும் முக்கியமானது. உடனடியாக ஜாதிவாரி கணக்கீட்டை உள்ளடக்கி, மக்கள் தொகை கணக்கீட்டுக்கான நடவடிக்கைகளை துவக்குமாறு ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.