வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான ஆராயப்படும்: சுரேஷ் கோபி!

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து இன்று 6-வது நாளாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வயநாடு நிலச்சரிவு பகுதியை மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி பார்வையிட்டார். முண்டக்கையின் பூஞ்சிரிமட்டம் பகுதிக்கு வந்த அமைச்சர் சுரேஷ் கோபி அங்கு நடைபெறும் மீட்பு, தேடுதல் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவர் வயநாட்டில் உள்ள நிவாரண முகாம்களுக்கும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் விம்ஸ் மருத்துவமனைக்கும் செல்லவிருக்கிறார்.

முன்னதாக, அமைச்சர் சுரேஷ் கோபி கேரள பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸிடம் ஆலோசனை நடத்தியிருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சுரேஷ் கோபி, “வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சட்ட அம்சங்கள் ஆராயப்பட வேண்டும். அதற்காக மத்திய அரசு வயநாடு நிலச்சரிவு நிலவரத்தை ஆராய்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கும், அவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மீட்புப் பணிகளில் கூடுதல் படைகள் தேவைப்பட்டால் அதுபற்றி கேரள அரசு மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று கேரள போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்தோருக்கான விழாவில் பங்கேற்ற போது, “வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். ஒரு ஒட்டுமொத்த கிராமமுமே நிலச்சரிவில் அழிந்தது கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணியில் கடமையைவிட மனிதம் மிஞ்சி நிற்கிறது. வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணியில் காவல்துறை சிறப்பாக பங்களிப்பை செலுத்திவருகிறது. தங்கள் உயிரைவிட பாதிக்கப்பட்டோர் நலனே முக்கியம் என காவல்துறையினர் களப்பணியாற்றி வருகின்றனர். அது கேரள காவல்துறையின் துணிச்சலுக்கு சான்று” என்றார்.

6-வது நாளாக மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் காணாமல் போனாரின் எண்ணிக்கை 206 ஆக இருக்கிறது. உயிரிழப்பு 320-ஐ கடந்து விட்ட நிலையில் அடையாளம் காணப்படாத உடல்களுக்கு 72 மணி நேரத்தில் இறுதிச் சடங்கு செய்துவிடுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்றைய மீட்புப் பணியில் 1300 பேர் ஈடுபட்டுள்ளதாக வயநாடு ஆட்சியர் மேகாஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும் நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகளுக்குள் இரவு நேரங்களில் யாரும் செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக இரவு நேர காவல் ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.