கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யணும்: ஓ.பன்னீர்செல்வம்!

தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவிகித ஆசிரியர்கள்தான் நிரந்தரமாகப் பணியாற்றி வருகிறார்கள். மீதமுள்ள 80 சதவிகித ஆசிரியர்கள் கெளரவ விரிவுரையாளர்களாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இதனைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-

கெளரவ விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள். கற்பித்தல் பணியைத் தவிர, அரசின் உயர்கல்வித் திட்டங்களுக்கு வேண்டிய தகவல்களை மாணவர்களிடமிருந்து பெற்று
அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியையும் இவர்கள் மேற்கொண்டு
வருகிறார்கள். கௌரவ விரிவுரையாளர்கள்தான் அரசுக் கல்லூரிகளின் ஆணிவேராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் போன்றவற்றை படித்துள்ளதோடு, தேசிய தகுதித் தேர்வு, மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றிலும் நேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் பெறும் தொகுப்பூதியம் மாதத்திற்கு வெறும் 25,000 ரூபாய் மட்டுமே. இந்தத் தொகுப்பூதியமும் 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவான ஊதியம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அரசு கல்லூரிகளில் உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வினை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது கௌரவப் பேராசிரியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் வறுமையில் கௌரவ விரிவுரையாளர்கள் வாடிக் கொண்டிருந்தாலும், தங்களுக்கு விடிவுகாலம் வரும், தங்களுடைய பணி நிரந்தரம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், திமுக அரசின் எழுத்துத் தேர்வு என்ற முடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் கல்வித் தகுதி, அனுபவம், தற்போது அவர்கள் பெற்றுவரும் மதிப்பூதியத்தையும், அவர்களின் வறுமை நிலையையும் கருத்தில் கொண்டு, தகுதியுள்ள அனைத்து கௌரவ விரிவுரையாளர்களையும் உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை 2019 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.