வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா: ஓவைசி கண்டனம்!

வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நலன்கள், சொத்துகளை பராமரிக்கக் கூடிய அமைப்பாக இருப்பது வக்பு வாரியம். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்
2013-ம் ஆண்டு வக்பு வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வக்பு வாரியத்தின் அதிகாரங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக ஓவைசி கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் இந்த முயற்சி மத சுதந்திரத்தில் தலையிடுவதாகும். பாஜக தமது இந்துத்துவா செயல்திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசு வக்பு சொத்துகளை கையகப்படுத்த முயற்சிக்கிறது. வக்பு வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்க நினைக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் மசோதாவில் உள்ள திருத்தங்கள் மூலம், வக்பு வாரியம் உரிமை கோரும் அனைத்து சொத்துகள் மீதும் பரிசீலனை கட்டாயம் என நடைமுறையை உருவாக்க நினைக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. இதனா தர்காக்களும் மசூதிகளும் இருக்கும் இடங்களும் பிரச்சனைக்குரியதாக மாறக் கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.