வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமமானது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-
‘வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்’ என்று சொல்வார்கள். அதாவது வீட்டை வாங்குவது என்பது அந்த அளவுக்கு சிரமமான காரியம். இருப்பினும், தன் வாழ்நாளில் எப்படியாவது வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடனைப் பெற்று, வீட்டை வாங்குவதை பொதுமக்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதற்கும் வேட்டு வைக்கும் பணியை தி.மு.க. அரசு மேற்கொண்டுள்ளது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், முக்கியமான கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து இருக்கிறது. இதன் காரணமாக, வீடுகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. வீட்டின் விலை உயர்விற்கு இது முதல் காரணம்.
இதேபோன்று தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக்கையில், வழிகாட்டி மதிப்பீடு பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், வழிகாட்டு மதிப்பீட்டை நியாயமாக நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டு, சுட்டுமானத் தொழிலில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, ஏற்கெனவே இருந்த வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதன் காரணமாக, வீட்டினை பதிவு செய்வதற்கான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது வீட்டின் விலை உயர்விற்கு இரண்டாவது காரணம்.
மேலும், பிரிபடா பாகத்திற்கு ஒரு பத்திரப் பதிவு, கட்டடத்திற்கு ஒரு பத்திரப் பதிவு என்ற நிலையை மாற்றி, பிரிபடா பாகத்தின் அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கட்டப்பட்ட குடியிருப்பின் அளவை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், இரண்டு மடங்கு கூடுதலாக பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தாள் கட்டணத்தை செலுத்தக் கூடிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள். வீட்டின் விலை உயர்விற்கு இது மூன்றாவது காரணம்.
இவையெல்லாம் போதாது என்று. கட்டட அனுமதிக்கான கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதன்படி, அனைத்துவிதமான கட்டட அனுமதிக்கான கட்டணங்களும் இரு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சதுர அடிக்கு 100 ரூபாய் எனவும், பிற மாநகராட்சிகளில் சதுர அடிக்கு 74 ரூபாய் முதல் 88 ரூபாய் எனவும், நகராட்சிகளில் சதுர அடிக்கு 70 முதல் 74 ரூபாய் எனவும், பேரூராட்சிகளில் 45 ரூபாய் முதல் 70 ரூபாய் எனவும், ஊராட்சிகளில் 15 ரூபாய் முதல் 27 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. உதாரணத்திற்கு, இதுவரை 8,900 சதுர அடிக்கு மொத்த அனுமதிக் கட்டணமாக 4.5 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த கட்டண உயர்வு காரணமாக 9.5 லட்சம் ரூபாயாக, அதாவது இரு மடங்கிற்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வீட்டின் விலை உயர்வதற்கான தி.மு.க. அரசின் நான்காவது நடவடிக்கை. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய, நடுத்தர மக்கள்தான். இந்தக் கட்டண உயர்வு அனைத்தையும், பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தவிர கட்டுமான நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லை.
கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக, வீடு வாங்கும் ஒவ்வொருவரும் ஒரு வீட்டிற்கு கூடுதலாக குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சீரமைப்பு என்று சொல்லிக் கொண்டு மக்கள்மீது கூடுதல் நிதியை சுமத்துவது நியாயமற்ற செயல். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தேனீ எப்படி பூக்களைக் காப்பாற்றிக் கொண்டே தேனை எடுக்கிறதோ, அதுபோல மக்களைத் துன்புறுத்தாமல் அவர்களிடமிருந்து வரியைப் பெற்று. அது மக்களின் நல்வாழ்விற்கு உதவுவதை உணர்த்துவது போல் அமைவதுதான் வரி வசூலிக்கும் முறை. இதற்கு முற்றிலும் மாறாக, கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களிடமிருந்து அநியாயமான முறையில், பல வழிகளில் தொடர்ந்து வரி வசூலிக்கப்படுகிறது. இது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டட அனுமதிக்கான கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.