கருணாநிதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த அமைதி பேரணியில் திமுக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 6ஆவது ஆண்டு நினைவு தினம் ஆக.7 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் எழுதி உள்ளார். இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
நம் உயிருடன் கலந்த தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாள், ஆகஸ்ட் 7-ஆம் நாள். ஆறாத வடுவாக நம் இதயத்தை கீறிக் கொண்டிருக்கிறது. அவர் நம்மை விட்டுப் பிரிந்த அந்த வேதனை மிகுந்த நாள். ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று புதுப்பிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தின் திறப்பு விழாவில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களில் ஒருவனாக நான் பங்கேற்றேன். உங்களைப் போலவே நானும் அந்த மேம்பாலத்தைப் பயன்படுத்துகிற பயனாளிதான். அந்தப் பயன் நமக்கு கிடைக்கச் செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் கருப்பொருளாக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் குறளை, திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் குரலாக முன்னெடுத்தவரும் கருணாநிதி தான். மனித சமுதாயத்தில் ஓர் உயிர்கூட பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரிக்கப்பட்டு, தனது அடிப்படை உரிமைகளை காலம்காலமாக பறிகொடுத்துக் கொண்டே இருக்கக்கூடாது என்பதே சமூகநீதியின் அடிப்படை கொள்கை.
அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், ஐந்து முறை தனக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய போதெல்லாம் சமூகநீதிக் கொள்கையை இடஒதுக்கீட்டின் மூலம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றியவர் கருணாநிதி தான். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், சிறுபான்மை சமுதாயத்தினர் என அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் சமூகநீதிக் கொள்கை வழியாக நிலைநாட்டி, தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவினை இன்றுள்ள 69 விழுக்காட்டிற்கு உயர்த்தி வைத்தவரும் அவர்தான். பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18% என உயர்த்தியவரும் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதிதான். அதில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு உரிய அளவில் ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியவரும் அவர் தான்.
அருந்ததியர் சமுதாயத்தினரின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அந்த உள்ஒதுக்கீட்டு மசோதாவை கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்மொழியும் வாய்ப்பைப் பெற்றது, அன்று துணை முதலமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான்தான் என்பதில் இன்றைய கழகத் தலைவராகவும், கலைஞரின் மகன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்கிறேன். அந்த உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் அருந்ததியர் சமுதாயத்து மாணவி மருத்துவம் படிப்பதற்கான ஆணையையும் வழங்கி மகிழ்ந்தது மறக்க முடியாத நினைவு. சிறுபான்மைச் சமுதாயத்தினரான முஸ்லீம்களுக்கு 3.5% தனி இடஒதுக்கீட்டிலும், அருந்ததியர் சமுதாயத்தினருக்கான 3% உள்ஒதுக்கீட்டிலும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில், உரிய தரவுகளுடனும், தெளிவான சட்டப்பார்வையுடனும், சமூகநீதியில் உண்மையான அக்கறையுடனும் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்டவை என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.
அந்தவகையில், நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் தலைவர் கருணாநிதி நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம். எதையும் தாங்கும் இதயம் கொண்ட தன் அண்ணன் அருகில் ஓய்வு கொள்ளும் ஓயாத உழைப்பாளியாம் கருணாநிதியின் நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது.
கருணாநிதியின் வரலாற்றையும் ஒரு நூற்றாண்டுகால தமிழ்நாட்டின் வரலாற்றையும் விளக்கும் வகையிலான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ எனும் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய பேரறிஞர் அண்ணா – கருணாநிதி நினைவிடங்கள் அமைந்துள்ள இடத்தை இந்த குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாகும். தங்கள் தலைமுறையை வாழவைத்த தலைவருக்குத் தமிழர்கள் செலுத்தும் நன்றிக் காணிக்கை இது. நம் தலைவருக்கு நாமும் நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள தலைவர் அலுவலகங்களில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துங்கள். தொண்டர்கள் அவரவர் வீடுகளில் கருணாநிதிக்கு நன்றியை செலுத்துங்கள். என்றென்றும் அவர் நம் உள்ளத்திற்குத் தரும் உத்வேகத்துடன் நம் லட்சியப் பயணத்தை தொடர்வோம். மக்கள் பணியாற்றித் தொடர் வெற்றிகளைக் குவிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.