சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்பாட்டம் தொடர்பாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் கடந்த ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
ஆர்பாட்டத்தில் பேசிய சீமான், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் ஒன்றை பாடினார். தொடர்ந்து, “இந்த பாடல் இன்றில் இருந்து உலகப் புகழ் பெறும். என் மீது வழக்கு போடுவார்கள். முடிந்தால் வழக்குப் போட்டுக்கொள்ளுங்கள். என் செல்போனை எடுத்துப் பார்த்தால் திமுகவைப் பற்றி கொச்சையாக பேசிய ஆடியோக்கள் தான் உள்ளன. நான் பேசிய ஆடியோக்களை வெளியிடுங்கள். ஐபிஎஸ் படித்து வருவது, எஸ்.பி, ஏசி, டிசி பணிக்கெல்லாம் வருவதற்கு எதற்காக.. சீமான் யாரிடம் என்ன பேசுகிறான் என்பதை வெளியிடுவதற்காகவா? இதெல்லாம் உங்கள் வேலையா?
திடீரென காளியம்மாள் மீது இவர்களுக்கு என்ன பாசம். மயிலாடுதுறையில் காளியம்மாள் போட்டியிட்ட போது, போய் வேலை செய்துவிட்டு இதுகுறித்து பேசியிருக்கலாமே.. நாங்கள் காளியம்மாளை பிசிறு என்போம், பிறகு உருசு என்போம். இது எங்கள் கட்சியின் பிரச்னை. அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்ததை வரவேற்கிறேன் என்ற சீமான், “ஆனால் தண்ணீர் தர முடியாது என்று மறுத்த கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறவில்லை” என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திமுக ஆட்சியில் ஒரு மாதத்தில் 133 கொலைகள் நடந்துள்ளதாகவும் மேலும் 134 ஆவதாக ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளது. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. குற்ற சம்பவங்களுக்கு கடும் தண்டனைகள் இல்லாததால் குற்றங்கள் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கேவலம்.
சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்களும் இளம் பெண்களும் திரும்புவதை தடுக்கவே தமிழக அரசு புதுமைப்பெண், தவப்புதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவ மாணவிகள் சீமானை நோக்கி ஓடுவதை பார்த்து அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களுடைய ஓட்டை பெறுவதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
திடீரென திமுகவினருக்கு முருகன் கடவுளாக காட்சியளிக்கிறார் நான் வேல் வேல் வெற்றிவேல் என திருமுருகப் பெருவிழா நடத்திய போது முரசொலியில் என்னைத் திட்டி எழுதிய கட்டுரை உள்ளது போது முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் குறைந்தது 20 நிமிடம் ஆவது முருகனைப் பற்றி பேசுவாரா இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
மேடையில் வைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறாகவும், காவல் துறையினர் குறித்தும் சீமான் பேசிய வார்த்தைகள் கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரை கொச்சைப்படுத்தி சீமான் திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி எஸ் பி அருண்குமார் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வருண்குமார் ஐபிஎஸ் கூறியிருப்பதாவது, சீமானின் அவதூறு பேச்சுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது மேடையில் பேசினாலும் கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் சீமானின் பொய்யான அபிப்பிராயங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் வழக்கு தொடர்வேன் எனவும் திருச்சி எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.