விலையில்லா வேட்டி, சேலை மற்றும் மாணவர்களுக்கான 4 செட் விலையில்லா பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டங்களில் திமுக அரசு சுணக்கம் காட்டுவதாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற பொது சித்தாந்த அடிப்படையில் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை அவருக்குப் பின் கழகப் பொறுப்பேற்ற ஒரு குடும்பம், ‘தொண்டர்களுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தை கபளீகரம் செய்து, அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, குடும்ப ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கிறது.
தமிழக நெசவாளர்கள் தொடர்ந்து தங்களது நெசவுத் தொழிலை தொய்வில்லாமல் செய்துவர ஏதுவாக, பொதுமக்கள் தைப் பொங்கல் பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஏற்றத் தாழ்வின்றி ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் விலையில்லா 4 செட் சீருடைகள் வழங்கும் திட்டத்தையும், அதிமுக ஆட்சிக் காலங்களில் செம்மையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்பட்டு வந்தன.
திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட குறித்த காலத்தில் தகுதியுள்ள பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலையை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கியதில்லை. குறித்த நேரத்தில் தமிழக நெசவாளர்களுக்குப் பணி ஆணை வழங்காமலும், தாமற்ற நூல்களை வழங்கி நெருக்கடியை ஏற்படுத்தி வெளி மாநிலங்களில் இருந்து வேட்டி சேலைகளை வாங்கி நிலைமையை சமாளிக்கது. இதன் காரணமாக, தமிழக விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் வேலையில்லாமல், தங்களது தறிகளை எடைக்குப் போடும் சூழ்நிலையையும், கஞ்சி தொட்டி திறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதையும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக பலமுறை நாங்கள் திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், சட்டமன்றத்தில் பலமுறை அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம்.
குறிப்பாக இந்த ஆண்டு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் திமுக அரசு, குறித்த நேரத்தில் நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்காமலும், வெளி சந்தையில் தரமற்ற நூல்களை விலைக்கு வாங்கியதாலும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்வதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா 4 செட் சீருடைக்கு பதில், 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 4 செட் வழங்கியதாக கணக்கு காட்டுவதாகவும், இதன் மூலம் இந்த திமுக ஆட்சியாளர்கள், அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்துவதாகவும் செய்திகள் வருகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற அடிப்படையில், எல்லா திட்டங்களிலும் கமிஷன், கலக்ஷன், கரப்ஷன் என்று திமுக அரசு, தனது ஆக்டோபஸ் கரங்களை அங்கிங்கெனாதபடி, அனைத்துத் துறைகளிலும் நீட்டியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடைகளை உடனடியாக வழங்கவும், விலையில்லா வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்கிடவும், விலையில்லா வேட்டி, சேலை மற்றும் சீருடைகள் நெய்வதற்கான வேலைகளை தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிடவும், இதன்மூலம் தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
நெசவுத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு, குறித்த காலத்தில் பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் வழங்காமல் ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசின் சுயநலப் போக்குக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஏழைகளின் கண்ணீர் திமுக ஆட்சியாளர்களை சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.