தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கான பயண தேதி 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நம் மாநிலத்துக்கு தேவையான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக கடந்த 3 ஆண்டுகளில் அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ரூ. 6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. இதுதவிர வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் துபாய், பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளுக்குச் சென்ற முதல்வர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
அந்த வரிசையில் மீண்டும் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க செல்ல உள்ளதாக கூறப்பட்டது. அதாவது முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்க செல்ல உள்ளதாகவும், 15 நாட்கள் அங்கு தங்கி தொழில் முதலீடுகளை அவர் ஈர்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பயண தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணம் என்பது 5 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ம் தேதிக்கு பதில் முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27 ம் தேதி அமெரிக்க புறப்பட்டு செல்ல உள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவில் அவர் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், உயரிய பொறுப்புகளில் இருப்பவர்களை சந்தித்து தொழில் முதலீடு தொடர்பாக பேச உள்ளார். குறிப்பாக கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை முதல்வர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்தித்து அவர்களுடனும் உரையாற்ற உள்ளார்.