தலித்துகள், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. ஆனால் இத்தகைய உள் இடஒதுக்கீட்டின் போது பொருளாதார அளவு கோல் என்ற கிரீமிலேயர் முறையை கவனத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது விவாதமாகி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கிரீமிலேயர் கருத்தை நீக்க கோரி மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என லோக்சபாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு, தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டில் 3% உள் இடஒதுக்கீடு வழங்கினார் முதல்வராக இருந்த கருணாநிதி. ஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதேபோல தலித், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டை உள் இடஒதுக்கீடு மூலம் ஒரு பிரிவினருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்குகளில் சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்றமானது, தலித்- பழங்குடிகளின் இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் பொருளாதார் அளவுகோலை (கிரீமிலேயர்) கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது. இந்த 2-வது கருத்து விவாதப் பொருளாகி இருக்கிறது.
லோக்சபாவில் இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி பேசியதாவது:-
2009 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியின்போது தமிழ்நாட்டில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல், பழங்குடியினர் பிரிவு ஒதுக்கீட்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளது. அதில் உள் இடஒதுக்கீடு வழங்கும் போது கிரீமிலேயர் எனும் பொருளாதார அளவு கோலையும் கருத்தில் கொள்ள வேண்டும். வரும் காலங்களில் முதல் தலைமுறையினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இன்றைய காலகட்டத்திலும் பொருளாதார இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பொருந்தாத சமூக நிலைதான் நீடிக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்களை நீக்குவது தொடர்பாக ஒன்றிய அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். நிபந்தனையற்ற இட ஒதுக்கீடு முறை நீடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.