தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரமான முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை கேரளம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கூட்டணி தர்மத்தை விட மாநிலமும், மக்களின் நலனுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து திமுக அரசு செயல்பட வேண்டுமென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் நேரடியாகவும் சில மாவட்டங்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன. முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வரும் நிலையில் அணை பலமாக இருப்பதாக கண்காணிப்பு குழுவினர் உறுதி செய்தனர். ஆனாலும் முல்லைப் பெரியாற்றில் அணை கட்டியே தீருவோம் என கேரளா பிடிவாதம் பிடித்து வருகிறது.
இந்நிலையில் கூட்டணி தர்மத்தை விட மாநிலமும், மக்களின் நலனுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து திமுக அரசு செயல்பட வேண்டுமென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் எம்.பி திரு. ஹிபி ஏடன் அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டுவதற்கான நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது ஒட்டுமொத்த கேரளமும் புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதை தெளிவு படுத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழுவும், உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்த பின்பும், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி புதிய அணை கட்டும் முயற்சியில் பிடிவாதம் காட்டும் கேரளத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.
மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை செயல்படுத்த முன்வராத திமுக அரசால், தற்போது தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்ட மக்களின் ஜீவாதாராமாக திகழும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சிக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க மறுப்பதும், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற 39 உறுப்பினர்கள் மாநில உரிமை பறிபோவதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதும் தென்மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
எனவே, கூட்டணி தர்மத்தை விட மாநிலமும், மக்களின் நலனுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களை கொடுத்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டும் கேரளத்தின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கேரளா – தமிழக எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை போக்க 1893ம் ஆண்டு அப்போதைய பொறியாளர் பென்னிகுக் கட்டினார். இந்த அணை என்பது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை தான் பராமரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி மட்டுமே உச்சஅளவாக கொண்டு நீர் தேக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முல்லை பெரியாறு அணை பலமிலழந்து விட்டதாக கேரளா முன்வைக்கும் குற்றச்சாட்டு தான் காரணமாகும். தமிழக பொதுப்பணித்துறை, மத்திய அரசின் நீர்வளத்துறை இன்ஜினியர்கள், நிபுணர்கள் குழுக்கள் முல்லை பெரியாறு அணையை பலமுறை ஆய்வு செய்து அணை மிகவும் பலமாக உள்ளது என கூறிவிட்டனர். மேலும் உச்சநீதிமன்றமும், வல்லுநர்கள் குழுவும் கூட முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என திட்டவட்டமாக தெரிவித்தாலும் கூட கேரளாவை சேர்ந்த சில விஷமிகள் தொடர்ந்து சேட்டை செய்து வருகின்றனர். முல்லை பெரியாறு அணை குறித்து வதந்திகளை பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
சமீபத்தில் கேரளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400 க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 100க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன? என்றே தெரியவில்லை. இத்தகைய சூழலில் தான் மீண்டும் முல்லை பெரியாறு பற்றி சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதாவது முல்லை பெரியாறு அணை வலுவிழந்துள்ளது. இதனால் இந்த அணையால் கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்படலாம். இதனால் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
அதேபோல் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி டீன் குரியகோஸ் லோக்சபாவில், ‛‛முல்லை பெரியாறு அணை என்பது தண்ணீர் குண்டு. இதனால் அந்த அணையை இடிக்க வேண்டும்” என்றார். அதேபோல் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு மத்திய மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி, ‛‛முல்லைப் பெரியாறு அணை தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுதான் வருகிறது. முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் எதுவுமே இல்லை” என்றார்.
அதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்க வலியுறுத்தி கேரளா மாநில காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இந்நிலையில் தான் காங்கிரஸ் எம்பி டீ்ன் குரியகோஸ் தெரிவித்தது பற்றியும், முல்லை பெரியாறு அணை குறித்தும் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,
‛முல்லை பெரியாறு அணை பற்றி தற்போது எந்த கவலையும் பட தேவையில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு தொடரும்” என்றார்.
இதன்மூலம் முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதை பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு தொடரும் என அவர் கூறியிருப்பது என்பது முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.