வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். தீர்ப்பு நாளை இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தம் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். அமெரிக்காவின் சாரா ஆனை எதிர்த்து விளையாட வினேஷ் போகத் தயாராகி வந்தார். இந்திய ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார். இதனால் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் கிடைக்குமா அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மல்யுத்த விதிகளின் படி 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்பவர்கள் அந்த எடையை கூடுதல் எடையில் இருக்கக் கூடாது. முதல் நாள் இரவு வினேஷ் போகத் எடை கூடுதலாக இருப்பது தெரிய வந்த போது, உடனடியாக உடற்பயிற்சியை தொடங்கியுள்ளார். ஆனால் 100 கிராம் கூடுதலாக இருந்ததால், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கமும், கியூபா வீராங்கனை லோபஸ் வெள்ளிப் பதக்கமும், சுசாகி வெண்கலமும் வென்றனர்.
இந்த விரக்தியால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தலைவர்களும் அவருக்கு ஆறுதல் கூறினர். நாடாளுமன்றத்தில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. வினேஷ் போகத்திற்கு ஆதரவாக வாதங்களை முன் வைத்த சால்வே, போட்டியின் அட்டவணை, ஒரே நாளில் 3 போட்டிகளில் விளையாடியது உள்ளிட்ட காரணங்களை அடுக்கியுள்ளார். அதேபோல் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள வெப்பமான சூழல், அதிகளவிலான தண்ணீர் தேவைப்பட்டது, வினேஷ் போகத்தின் உடல்நலம் உள்ளிட்டவை குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி முடிவதற்கு முன் வினேஷ் போகத் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு 9.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பு நாளை இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அன்னாபெல்லா கமிட்டி முடிவை எட்டும் என்று விளையாட்டு தீர்ப்பாயம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.