நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க.. ஆனால், அறிவே இருக்காது: தா.மோ.அன்பரசன்!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலுக்கும் திராவிட இயக்கத்திற்கும் திரைத் துறைக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உண்டு. முன்னாள் முதல்வர்கள் அண்ணாவும், மு.கருணாநிதியும் திரைப்படங்களில் வசனம் எழுதியுள்ளனர். இதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைத் துறையில் நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்து பல ஆண்டு காலம் முதல்வராக பதவி வகித்தவர்கள். விஜயகாந்த் கூட தேமுதிகவை ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை வந்தார். அதே சமயம் சிவாஜி கணேசன், பாக்யராஜ், கார்த்தி, கமல்ஹாசன் என கட்சி ஆரம்பித்த பல நடிகர்களால் அரசியலில் சோபிக்க முடியவில்லை. மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அதுதொடர்பாக கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் நடந்த திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாமில் பேசிய ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவார்கள். நடிகர்களை திரைப்படங்களில் பார்க்கலாம், ரசிக்கலாம். அத்துடன் வந்துவிட வேண்டும். நடிகர்களுக்கு அறிவு இருக்குமா என்றால் இருக்காது. கட்சி நடத்துவது என்றால் சாதாரணமா? தமிழகத்தில் ஒரு சின்ன சந்து இருந்தால் கூட அதில் இரண்டு குடும்பங்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருப்பர். திமுக இல்லாத ஊர் கிடையாது, பலமாக இருக்கிறோம். இவ்வளவு பெரிய கட்சியான நாமே 10 வருடங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம்.

நடிகர்கள் செல்லும்போது கூட்டம் கூடுகிறது அல்லவா.. அதனை பார்த்து மகிழ்ச்சியடைந்து அடுத்த முதல்வர் தான் தான் என்று அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள்? நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றிபெறுவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்து எடுபட முடியாது. நடிகர்களின் கனவுகளை பொய்யாக்க வேண்டும் என்றால், யாருடைய தயவும் இல்லாமல் வெற்றிபெற நாம் அமைப்பு ரீதியாக பலமாக வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் யார் தயவும் நமக்கு தேவையில்லை. எந்தத் தேர்தல் வந்தாலும் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும். இவ்வாறு அவர் பேசினார்.