வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்: திருமாவளவன்!

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி விவகாரம் தான். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற உதயநிதிக்கு, 2022 டிசம்பர் மாதம் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு அவ்வப்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் வந்து அடங்குவதாக உள்ளது. மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக உதயநிதி விரைவில் துணை முதல்வராக பொறுப்பு ஏற்கிறார் என்ற தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுத்திருக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என அழைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பொடி வைத்து பேசினார். இதுதொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் பல விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது என்பது திமுகவின் உட்கட்சி விவகாரம். யாரை துணை முதல்வராக்குவது, யாரை அமைச்சராக்குவது என்பது திமுக முடிவு செய்ய வேண்டியது. அதில் நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் இந்து மற்றும் இந்து அல்லாதோர் என்கிற அரசியலை திணிக்கப் பார்க்கிறார்கள். முருகன் தமிழ் கடவுள் என்று பலரும் காலம் காலமாக நம்பிக்கொண்டிருக்கிற, சொல்லிக்கொண்டுள்ள ஒரு விஷயம். பல நூறு ஆண்டுகளாக முருகனை தமிழ் கடவுள் என்றுதான் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் தமிழக அரசியல் களத்தை மதவாத அரசியல் களமாக மாற்றும் முயற்சிகளை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு தமிழக மக்கள் இடமளிக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்.

மேலும், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்றும் திருமாவளவன் கூறினார்.