கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் 19 ஆவது மதகு உடைந்ததால் கோப்பால், விஜயநகரா, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வாரங்களாக கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா, அல்மாட்டி, நாராயணபுரா, லிங்கனமக்கி, சூபா, வராஹி, பத்ரா, கட்டபிரபா, மலபிரபா உள்ளிட்ட அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டின. இது விவசாயிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொப்பல் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெள்யேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், உபநீர் வெளியேற்றப்படும் துங்கபத்ரா அணையின் 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அணையின் 33 மதகுகள் திறக்கப்பட்டு அவற்றின் வழியாக வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது 3 லட்சம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. சேதமடைந்த 19 ஆவது மதகில் இருந்து மட்டும் சுமார் 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தண்ணீர் திறக்கப்பட்டால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 65 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும், இதனால், 6 லட்சம் ஹெக்டேருக்கு மேல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, ஏற்கனவே வெள்ளத்தைக் காணத் தொடங்கியுள்ள ஹம்பி மற்றும் ஜனதா பிளாட் விரைவில் கடுமையான வெள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொப்பல், விஜயநகரா, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மற்றும் அணை மற்றும் ஆற்றுப்படுகைகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடைந்த மதகினை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், 105 டிஎம்சி கொள்ளவு கொண்ட துங்கபத்ரா அணையில் இருந்து குறைந்தபட்சம் 60 முதல் 65 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட்டால்தான் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதன்பிறகு தான் வெள்ளத்தில் உடைந்த மதகினை சீர்செய்யும் பணிகளைத் தொடங்க முடியும். இதனால் அணையில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அந்த மாநில அமைச்சர் சிவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து நிபுணர்கள் குழு நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளது. பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை வினாடிக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படும். ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் மூழ்குவதற்கு வாய்ப்புள்ளது.