முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்ட அளவை 142 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க கேரள, தமிழக அரசுகளுக்கும், சட்டபூா்வ துறைகளுக்கும் உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் மேத்யூஸ் ஜெ நெடும்பாறா உள்பட 4 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:-
சுண்ணாம்புக்கல் மற்றும் சுா்க்கியால் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையானது 50 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக 1985-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. தற்போது, 129 ஆண்டுகள் பழைமையான அணையாக இது உள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் உள்ள இந்த அணை உடைந்தால், கேரளத்தில் இடுக்கி, ஆலப்புழா, எா்ணாகுளம், கோட்டயம் ஆகியப் பகுதிகளில் வாழும் 50 லட்சம் மக்களின் உயிருக்கு அது ஆபத்தாக முடியும்.
சமீபத்தில், கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சோகத்தை கருத்தில்கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீா்தேக்க அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும். ஏனெனில், முன்னதாக இந்த அணையின் நீா்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயா்த்த உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்த போதிலும், அதனை கேரளா அரசு முழு மனதுடன் ஏற்கவில்லை.
இது மக்களின் உயிா் சாா்ந்த விவகாரம் என்பதால், முல்லைப் பெரியாறு அணையில் 120 அடிக்கு மேல் நீரை தேக்கக்கூடாது என தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநில அரசுகளுக்கும் மற்றும் பிற சட்டபூா்வ துறைகளுக்கும் உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் நிரந்தர தீா்வு ஏற்பட புதிய அணை கட்டப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கில் மனுதாரா்களை நேரில் ஆஜராகி வாதிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் வழக்குரைஞா் மேத்யூஸ் ஜெ நெடும்பாறா உள்ளிட்ட 4 போ் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.