“செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பேற்பாகள்? செபி தலைவரா? பிரதமர் மோடியா? அதானியா?” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை, மீண்டும் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ரிப்போர்ட்டில், கௌதம் அதானியின் அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளனர் என்று குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க். பெர்முடா மற்றும் மொரிஷியஸை தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிதிகளில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி குற்றம்சாட்டியது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரவுண்ட்-டிரிப்பிங் நிதிகள் மூலம் பங்கு விலைகளை உயர்த்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குகள் தொடர்பாக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருக்க, செபி தலைவர் மாதபி பூரி புச் அதானியின் சகோதரர் உடன் உடந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க். அதானி – செபி தலைவர் மாதபி பூரி புச் ஆகியோரை தொடர்புபடுத்தி ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கும் தகவல் மீண்டும் இந்திய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை செபி தலைவர் மாதபி பூரி புச் மறுத்துள்ளார். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை என்றும், தனிப்பட்ட லாபம் ஈட்டுவதற்காக இதுபோன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் ஏற்கனவே ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும் அதானி குழுமம் இன்று தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் செபி தலைவர் மாதபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் ராகுல் காந்தி. நாடு முழுவதும் உள்ள நேர்மையான முதலீட்டாளர்கள் அரசுக்கு கேள்விகளை எழுப்பி வருவதாகக் கூறிய ராகுல் காந்தி, “செபி தலைவர் மாதபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? பிரதமர் மோடியா? செபி தலைவரா? அல்லதுகௌதம் அதானியா? சிறு சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. செபி தலைவர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை மீண்டும் ஒருமுறை தானாக முன்வந்து விசாரிக்குமா என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜேபிசி விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அது என்ன வெளிப்படுத்தக்கூடும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த முறைகேடு பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணையை கோரியது குறிப்பிடத்தக்கது.