கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அவசர அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் நாகையில் இருந்து வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் கோடியக்கரை அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென அப்பகுதிக்கு இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்துள்ளனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்கள் 4 பேர் காயமடைந்தனர். அதாவது, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த மீனவர்கள் விரைவாக கரைக்கு திரும்பினர். பின்னர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் தமிழக மீனவர்களுக்கு பெரும் தலைவலியாக தொடர்கிறது. இந்த விவகாரம் பல ஆண்டுகளாக தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இத்தகைய சூழலில் கடற்கொள்ளையர்கள் விவகாரம் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த 8ஆம் தேதி இதேபோன்ற சம்பவம் அரங்கேறியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 5 மீனவர்கள் ஃபைபர் படகில் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள், பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், சாணக்கியன், நாகராஜ் ஆகியோர் ஆவர். அப்போது தமிழக மீனவர் ஒருவர் காயமடைந்தார். இயந்திர படகில் வந்த இலங்கை சேர்ந்த 5 கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகை வழிமறித்துள்ளனர்.
பின்னர் கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களால் மீனவர்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து படகில் இருந்து ஜிபிஎஸ், மீன்கள், செல்போன், டார்ச் லைன், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை எடுத்து கொண்டு தப்பி சென்றனர். உடனே அவசர அவசரமாக தமிழக மீனவர்கள் கரைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மீனவர்களின் குடும்பங்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.