நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள், ஆனால் அவர்களுக்கெல்லாம் அறிவு இருக்காது என அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் தமிழ் புதல்வன் திட்டமெல்லாம் ஒரு திட்டமா என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழக அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தை சரமாரியாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:-
நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள 36 லட்சம் வாக்குகளில் சுமார் 20 இலட்சம் வாக்குகள் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள்தான். புள்ளி விவரத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அப்பா திமுகவில் இருந்தால், பிள்ளை பேரன் எல்லாம் எங்களுடைய கட்சியில் தான் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கு இளம் பெண்களும் இளைஞர்களும் அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். அந்த பயத்தில் தான் படித்து முடித்துவிட்டு வரும் வாக்காளர்களை திமுக குறி வைத்துள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், தமிழ் புதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் என ஒரு ஓட்டுக்கு திமுக அரசு 18 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது.
தமிழ் புதல்வன் திட்டமெல்லாம் ஒரு திட்டம் என்று சொன்னால் வெட்கப்பட வேண்டும். படித்து முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். அவர்களின் வருவாய் பெருக்க வேண்டும். இளைஞர்கள் தங்கள் காலில் நின்று வாழும் வாழ்க்கையை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அரசு உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்படி உள்ளன? 300 மாணவிகள் படிக்கும் அரசு பள்ளியில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளன. ஆனால் திமுக அரசு 482 கோடிக்கு சிலை திறக்கிறார்கள், பல நூறு கோடிக்கு சமாதி கட்டுகிறார்கள். 50, 60 கோடிகள் செலவு செய்து கார் பந்தயம் நடத்துகிறார்கள். மேற்கூரை இல்லாத பள்ளிகளில் மரத்தடி நிழலில் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நலன் சார்ந்து செல்லாமல் இளைஞர்களுக்கு பணம் கொடுக்கிறது இந்த அரசு” என கடுமையாக சாடினார் சீமான்.
தொடர்ந்து விஜய் நடத்த உள்ள மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை என்றும் தனக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது என்றும் சீமான் தெரிவித்தார். மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து தாமோ அன்பரசன் கூறியது தொடர்பான கருத்துத்துக்கு பதில் அளித்த சீமான், அமைச்சர் தாமோ அன்பரசன், உதயநிதி பற்றி கூட பேசியிருக்கலாம். நீங்கள் ஏன் அதை விஜய் என்று நினைக்கிறீர்கள் என்றும் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார் சீமான்.
நடிகர்களுக்கு அறிவில்லை என்றால், ஏன் சரத்குமார், ராதிகா, குஷ்பு நெப்போலியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரை திமுகவில் சேர்த்துக் கொண்டீர்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் தா மோ அன்பரசன், நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள். ஆனா அவர்களுக்கு அறிவு இருக்குமா என்றால் இருக்காது. கட்சி நடத்துவது என்ன சாதாரணமா? நடிகர்கள் தங்களுக்கு வரும் கூட்டத்தை பார்த்து நான் முதலமைச்சராகி விடலாம் என்று அரசியலுக்கு வருகிறார்கள் என தரக்குறைவாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.