மக்கள் செல்வாக்குப் பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்துள்ள அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், ஜெயலலிதாவை அநாகரிமாக பேசிய தா.மோ. அன்பரசனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி, பெருந்தலைவர் காமராசர், மூதறிஞர் ராஜாஜி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா என பல அரசியல் தலைவர்களை நாகரிகமற்ற முறையில், தரக் குறைவாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்ட கட்சி தி.மு.க. இதுதான் தி.மு.க.வின் பண்பாடு, கலாச்சாரம் என்பதை அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தி.மு.க. என்பது ஒரு நாகரிகமற்ற கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நான்கு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவரும், அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கொண்டு சென்றவரும், சமூக நீதி காத்த வீராங்கனையும், மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் தலைவருமான, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நாகூசும் அளவுக்கு தரக்குறைவாக பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேசப் பற்றும், தெய்வப் பற்றும் கொண்டவர் மாண்புமிகு அம்மா அவர்கள். 1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, அன்றைய பாரதப் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடம் தன்னுடைய தங்க நகைகளை அள்ளி வழங்கியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் அன்னை இந்திரா காந்தி, திரு. ராஜிவ் காந்தி, திரு. P.V. நரசிம்ம ராவ், திரு. H.D. தேவகவுடா, திரு. அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங், பீகார் முன்னாள் முதலமைச்சர் திரு. லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. முலாயம் சிங் யாதவ், ஆந்திர பிரதேச முதலமைச்சர் திரு. N. சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திரு. ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திரு. A.B. பரதன் உள்ளிட்டவர்கள் போற்றக்கூடிய ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘இரட்டை இலை’ சின்னம் பறிக்கப்பட்ட நிலையில், ‘சேவல்’ சின்னத்தில் களம் கண்டு, 22.37 சதவிகித வாக்குகளைப் பெற்று, 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். பின்னர் தன்னுடைய சொந்த செல்வாக்கால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நான்கு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். 2014 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் தனித்து களம் கண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிக் காட்டியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனித்து களம் கண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமை மாண்புமிகு அம்மா அவர்களை சாரும்.
ஆனால், தி.மு.க.வின் நிலை என்ன? கூட்டணி பலம் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதுதான் தி.மு.க.வின் நிலை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருந்ததால், தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டது. எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இருந்திருந்தால், தி.மு.க. படுதோல்வி அடைந்து இருக்கும். கூட்டணி பலமிருந்தும் 2006 ஆம் ஆண்டு மைனாரிட்டி ஆட்சியைத்தான் தி.மு.க.வால் அமைக்க முடிந்தது. இன்று மாண்புமிகு அம்மா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தி.மு.க. ஆட்சியே அமைத்திருக்காது. மக்களவைத் தேர்தலிலும் படுதோல்வி அடைந்திருக்கும். ஏனென்றால், மாண்புமிகு அம்மா அவர்கள் மக்கள் நலத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள். ஆனால், தி.மு.க.வோ தன்னலத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்ட கட்சி. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தயவால்தான். திரு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக வந்ததற்கு முழு முதற்க் காரணம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான். பிறர் தயவினால் முதலமைச்சரானவர் திரு. மு. கருணாநிதி அவர்கள். ஆனால் மாண்புமிகு அம்மா அவர்களோ மக்களின் செல்வாக்கினால் முதலமைச்சரானவர்.
மக்களுக்காக தன் உயிரை அர்ப்பணித்தத் தலைவி மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள். மாண்புமிகு அம்மா அவர்களைப் பற்றி பேசக்கூடிய தகுதியோ, அருகதையோ தி.மு.க.வில் யாருக்குமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு” என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, ‘நா’காக்க திரு. அன்பரசன் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்கிற ரீதியில், வரலாறு தெரியாமல், மறைந்த தலைவரைப் பற்றி பேசுவது ஓர் அமைச்சருக்கு அழகல்ல என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். பெண் என்றும் பாராமல், உலகம் போற்றும் உத்தமத் தலைவர் மாண்புமிகு அம்மா அவர்களை இழிவுபடுத்தி ஓர் அமைச்சர் பேசி இருப்பது வெட்கக்கேடானது. இனி வருங்காலங்களில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களை இகழ்ந்து பேசினால், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, திரு. தா.மோ. அன்பரசன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.