முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 14) தீர்ப்பளிக்கிறது. ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி பல கோடிகளை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவரது வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது.
பின்னர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அன்று முதல் 13 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டீன் ஜார்ஜ் மஷி ஆகியோர் அமர்வில் நேற்று வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன் வைக்கிறது என்றார். அப்போது அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு மாநில அரசு உதவி வருகிறது. இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தற்போது வரை முடிக்கவில்லை. இதில் செந்தில் பாலாஜி தரப்பில் 13 முறை இந்த வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறை ஒரு முறை கூட அவ்வாறு கேட்டதில்லை. எனவே விசாரணை தாமதமாவது குறித்து தனியாக நாங்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம் என வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அமலாக்கத் துறை வெவ்வேறு விவகாரங்களை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. எங்களை பொருத்தவரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் விசாரணை நடைமுறைகளை தான் நாங்கள் விசாரிக்கிறோம்.

இந்த விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும் என கேள்வி எழுப்பினார். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் செந்தில் பாலாஜியின் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு, இந்த வழக்கின் விசாரணை எப்போது நிறைவடையும் என கேட்கும் நிலைக்கு அமலாக்கத் துறை உள்ளது. ஆனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை, விசாரணையே தொடங்காத நிலையில் அவரை எத்தனை நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும். 13 மாதங்களாக சிறையில் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்படவில்லை.

விசாரணை எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை. சிறையில் இருக்கும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. முன்பு அவர் அமைச்சராக இருந்தார், ஆனால் தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லை. எனவே அவரால் சாட்சிகளை கலைக்கவும் முடியாது, விசாரணையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்தவும் முடியாது. அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என முகுல் ரோத்தகி வாதம் செய்தார்.

ஆனால் அமலாக்கத் துறையோ, மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜி பொருந்தாது என்று தெரிவித்தது. இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் , இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நாளை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கவுள்ளது.