“கோயம்பேடு பேருந்து நிலையத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் பூங்கா அமைக்க வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் 10 லட்சம் நபர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கத்தில் இன்று (ஆக.14) நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது:-
கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வலியுறுத்தி 10 லட்சம் கையெழுத்துகளை பெற இருக்கிறோம்.
இதுவரை காலநிலை மாற்றம் குறித்து பேசினோம். இப்போது, காலநிலை நெருக்கடி, காலநிலை பேரிடர், காலநிலை அவசர நிலை குறித்துப் பேசுகிறோம். இவை உருவானால், மனிதர்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும். தமிழகத்தில் ஆட்சிசெய்த திராவிட கட்சிகள் இயற்கை வளங்களை அழித்து விட்டனர். சென்னையில் 250 ஏரிகளை அழித்துள்ளனர். முகப்பேர் ஏரித் திட்டம் என்பதே, அங்கிருந்த ஏரியை மூடிவிட்டு கட்டிடங்கள் கட்டியதுதான். ஏரியை அழித்துவிட்டு தான் கோயம்பேடு பேருந்து நிலையத்தை உருவாக்கினார்கள். 30 ஆண்டுகளில் சென்னையில் பொதுவெளிப்பரப்பு 21 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துவிட்டது. அதேபோல், பசுமைப்பரப்பு 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைந்துள்ளது.
திராவிட மாடல் என்பது அம்பாசிடர் கார் காலத்தை சேர்நத பழைய மாடல் போலத்தான் உள்ளது. சென்னையில் 850 பூங்காக்கள் உள்ளன. அதில், 800 பூங்காக்கள் 2 ஏக்கருக்கு உட்பட்ட சிறிய பூங்காக்கள். சென்னையில் 5 பூங்காக்கள் தான் 10 ஏக்கருக்கு மேல் உள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு கேளிக்கை விடுதிகள் வேண்டாம். பூங்காக்கள் தான் வேண்டும். கோயம்பேட்டில் பூங்கா அமைத்தே ஆக வேண்டும். இதில் ஒரு ஏக்கரைக்கூட வேறு பயன்பாட்டுக்கு அனுமதிக்க மாட்டோம். சென்னைக்கான காலநிலை செயல் திட்டத்துக்கான தொடக்கமாக கோயம்பேடு பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்த கையெழுத்து இயக்கம் நிச்சயமாக அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கும். 30 லட்சம் நபர்களிடம் கையெழுத்துகளை பாமகவினர் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:-
கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது 30 லட்சம் மக்களின் கோரிக்கையாக உள்ளது. கோயம்பேடு ஏரியை மூடிவிட்டுத்தான் கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. அந்த 60 ஏக்கரில் கோயம்பேடு பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும். சென்னையில் 75 சதவீத இறப்புக்கு உடல் பருமன், இதய நோய், மனநல பிரச்சினைகள் போன்ற தொற்றா நோய்களே காரணமாக உள்ளன. அதனை தடுக்க ஒரே வழி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி தான். அதனால், கோயம்பேடு பசுமை பூங்கா வேண்டும்.
நியூயார்க்கில் 850 ஏக்கரில், லண்டனில் 350 ஏக்கரில், டெல்லியில் 240 ஏக்கரில், பெங்களூருவில் 220 ஏக்கரில் பெரிய பூங்காக்கள் உள்ளன. சென்னையில் பெரிய பூங்காவான செம்மொழி பூங்காவின் நிலப்பரப்பே 15 ஏக்கர் மட்டும்தான். சென்னையில் சராசரி மழைப்பொழிவு அதிகரிக்க்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சில மணி நேரங்களுக்குள் அதிக மழை பெய்யும். மழைநீரை உள்வாங்க திறந்தவெளிப் பகுதிகள் அவசியம் ஆகும். சுதந்திர தினத்தன்று கோயம்பேடு பூங்கா குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும். அந்த பூங்காவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை முதல்வர் வைத்துக் கொள்ளட்டும்.
மழை குறைவான நாடுகளில்தான் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்துவார்கள். ஆறுகள் போன்ற நீர் நிலைகள் உள்ள சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கான தேவை ஏன் ஏற்பட்டது? மழை நீரை சேகரிக்காமல் கடலுக்கு விட்டுவிட்டு, பிறகு ரூ.30 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அறிவித்து கமிஷன் வாங்குகிறார்கள். ஏரிகளின் மதிப்பு திராவிட கட்சிகளுக்கு தெரியவில்லை. இந்த ஆண்டும் சென்னையில் மழைவெள்ள பாதிப்பு ஏற்படும். அதிகமாக மரங்களை தமிழக அரசு நட வேண்டும். ஆனால் மரம் நடுவதாக கூறி ஊழல்தான் செய்கின்றனர்.
தமிழகத்துக்கு நீர் கிடைக்க மேற்கு தொடர்ச்சி மலையே காரணம். கொசஸ்தலை ஆற்றைத்தவிர அனைத்து ஆறுகளுக்கும் நீர்ப்பிடிப்பு பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலையே உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தேயிலை எஸ்டேட்களை அமைத்தால் நிலச்சரிவு ஏற்படும். ஆறுகளுக்கு நீர் கிடைக்காது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதைப் பார்க்கையில் வயிறு எரிகிறது. காவிரி உபரிநீர் திட்டங்களை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, அதன் பிறகு இழப்பீடு கொடுப்பதால் என்ன பயன். சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் எதுவுமே செய்யவில்லை. 99 சதவீத வெள்ளத்தடுப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டதாக கடந்த ஆண்டு தலைமைச் செயலாளர் கூறினார். ஆனால், வெள்ளப் பதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு வெள்ளப் பதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.