ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும், அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க் கட்சிகளும் அப்படி தான் அறிவிப்பார்கள் என கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 10 திருநங்கைகள் உட்பட 18 பேருக்குப் பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். விழா மேடையில் பேசிய கனிமொழி கூறியதாவது:-
திருநர்கள், திருநங்கைகள் இவர்களோடு நான் தொடர்ந்து பயணிக்க கூடிய ஒருவராக இருந்திருக்கிறேன் என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்கள். இந்த பயணம் என்பது பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கக் கூடிய ஒன்று. ஒரு காலத்தில் திருநங்கைகள் ஒரு பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்றாலும் வாங்க முடியாது. கல்லூரியில் சேர முடியாது, திருநங்கைகள் இருக்கிறார்கள் என்று எந்த அடையாளமும் இருக்காது. இந்த சமூகம் அவர்கள் மீது காட்டிய வேறு விதமான பார்வை தான் அதிகளவில் திருநங்கைகளை அறுவைசிகிச்சை செய்ய வைத்தது. திருநங்கைகள் கல்லூரிகளுக்குச் செல்ல விரும்பினால் நீங்கள் ஆணா, பெண்ணா என்று கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் அங்கேயே அவர்களது வாழ்க்கை முற்றுப்புள்ளியோடு நின்ற சூழல் இருந்தது. வாழ்வதற்கே, போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள்.
திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த தலைவர் தான் கலைஞர், பெரியார் வழியில் வந்த இந்த ஆட்சி இன்று வரை அதைச் செய்து கொண்டிருக்கிறது. இந்தக் கல்வி உங்கள் மீது ஒரு நம்பிக்கையைத் தரும், எங்களால் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கக்கூடியது கல்வி, நீங்கள் பல பேருக்கு முன்னுதாரணமாக மாற முடியும், இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர்கள் நீங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறியதாவது:-
2008ஆம் ஆண்டு முதல் முதலாகத் தலைவர் கலைஞர் தான் திருநங்கைகளுக்கு ஒரு ரெகக்னிஷன், எதிர்காலத்திற்காக ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தார். இந்த நாட்டிலேயே திருநங்கைகளை முதன்முதலாக அங்கீகரித்த மாநிலம் தமிழ்நாடு. சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருநங்கைகள் பட்டப்படிப்பு படிப்பதற்கு தடை வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான படிப்பு மற்றும் தங்கும் விடுதி செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து உள்ளார்.
ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும், அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் அப்படி தான் அறிவிப்பார்கள். உதயநிதி துணை முதலமைச்சர் என்ற அறிவிப்பை வெளியிடக்கூடிய ஒரே ஒரு நபர் நம்முடைய முதலமைச்சர் தான், அதை அவர் தான் முடிவு செய்வார். பாஜக தமிழகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.