10-வது இடம் பிடித்த சென்னை மருத்துவ கல்லூரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து!

தேசிய அளவில் சென்னை மருத்துவ கல்லூரி 10-வது இடம் பிடித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து டீன் தேரணிராஜன் வாழ்த்து பெற்றார்.

இந்தியாவில் உள்ள மொத்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 706. அதில், மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) 182 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பங்கேற்றன. இந்தியா முழுவதும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, தெற்கு பகுதியில் 76 மருத்துவக் கல்லூரிகள், வடக்கு பகுதியில் 43 மருத்துவக் கல்லூரிகள், கிழக்கு பகுதியில் 14 மருத்துவக் கல்லூரிகள், மேற்கு பகுதியில் 49 மருத்துவக் கல்லூரிகள் என்று மொத்தம் 182 அரசு மற்றும் தனியார்மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன.

இதில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் 2024-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) 10-ம் இடமும், மாநில அரசுகள் நடத்தும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் இந்திய அளவில் முதல் இடமும் பிடித்திருப்பது சிறப்புக்குரியது.

கடந்த காலங்களில் 2019-ம் ஆண்டு 16-ம் இடமும், 2021-ம் ஆண்டு 14-ம் இடமும், 2022-ம்ஆண்டு 12-ம் இடமும், 2023-ம்ஆண்டு 11-ம் இடமும் பிடித்தி ருந்தது. இந்த ஆண்டு மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 10-வது இடம் பிடித்துள்ளது சிறப்புக்குரியது.

இதற்கான சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் நேற்று காண்பித்து வாழ்த்து பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கவிதா, நோடல் அலுவலர் அன்புச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.