தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 20ம்தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. அத்துடன், ஆகஸ்ட் 20ம் தேதி முதல் வழக்காக செந்தில் பாலாஜி வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வருடம் ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கில் இதுவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தாக்கல் செய்யும் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை ஹைகோர்ட்டும் தள்ளுபடி செய்தபடியே இருந்தன.
இதனால், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டீன் ஜார்ஜ் மஷி ஆகியோர் அமர்வில் நேற்றுமுன்தினம் வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன் வைக்கிறது என்றார். உடனே அமலாக்கத்துறை, “செந்தில் பாலாஜிக்கு மாநில அரசு உதவி வருகிறது. இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டும்கூட, இதுவரை முடிக்கவில்லை. 13 முறை இந்த வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறை ஒரு முறை கூட அப்படி கேட்டதில்லை. அதனால், விசாரணை தாமதமாவது குறித்து தனியாக நாங்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம்” என வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும்” என்று கேள்விகளை எழுப்ப, “செந்தில் பாலாஜியின் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது” என்று பதிலளித்தது அமலாக்கத்துறை. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு, “விசாரணையே தொடங்காத நிலையில் அவரை இன்னும் எத்தனை நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும்? 13 மாதங்களாக சிறையில் செந்தில் பாலாஜி இருந்து வரும்நிலையில், இப்போதுவரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்படவில்லை. விசாரணை எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை. சிறையில் இருக்கும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு, அதற்கான ஆபரேஷனும் செய்யப்பட்டுள்ளது. முன்பாவது அவர் அமைச்சராக இருந்தார், ஆனால் இப்போது எந்த பதவியிலும் இல்லை. அவரால் சாட்சிகளை கலைக்கவும் முடியாது.. தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை இடையூறு செய்யவும் முடியாது. எனவே அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜிக்கு பொருந்தும்” என்றார் முகுல் ரோத்தகி. ஆனால் அமலாக்கத் துறையோ இதற்கு முட்டுக்கட்டை போட்டது.. மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜி பொருந்தாது என்றும் வாதிட்டது.
இப்படி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் , இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று பிற்பகல் உச்சநீதிமன்றம் வழங்கவுள்ளது. இதனால் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு வெகுவாக ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள மூன்று மூல வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்போகிறதா? 2500 குற்றம் சாட்டப்பட்ட நபர்களையும் விசாரிக்க போகிறதா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என கூறியே, செந்தில் பாலாஜி மீண்டும் விசாரணையை நடத்தியது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், ஜாமீன்மனு விசாரணை முடிந்து இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
அனைத்து தரப்பு வாதங்களையும் கட்டாயமாக முடிக்க வேண்டும் என்று கூறிய காரணத்தினால்தான் திங்கட்கிழமை அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிக்கப்பட்டன. ஆனால், நேற்றைய தினம் உச்சநீதிமன்ற பதிவேட்டில், இன்றைய தினம் ஆகஸ்ட் 14ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என்றும், செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை என இரு தரப்பிலுமே மேலும் சில விளக்கங்களை கேட்க உள்ளதால், இரு தரப்புனருமே இன்று ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர். மற்றபடி இன்று தீர்ப்பு வழங்குவோம் என்று சொல்லவில்லை. இதையடுத்து, இன்று காலை செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகியிருந்த நிலையில், துஷார்மேத்தா கோர்ட்டில் ஆஜராகவில்லை.. இதனால் துஷார் மேத்தா ஆஜராவதற்கு, நேரம் கேட்கப்பட்டதால், வருகிறது 20ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் கூறிய விளக்கங்களை சொலிசிட்டர் ஜெனரல் ஆகஸ்ட் 20ம் தேதி அளிக்க உள்ளதாக அமலாக்கத்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 20ம் தேதி முதல் வழக்காக செந்தில் பாலாஜி வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.