சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனல்களில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி திமுகவை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு வந்தார். அதுமட்டுமின்றி பிற யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து திமுகவை கடுமையாக சாடினார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை என்பது மே 4ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது காரில் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர். சவுக்கு சங்கர் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது அதிரடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் சவுக்கு சங்கருக்கு ஒரு நிம்மதி கிடைத்தது. ஆனால் இந்த நிம்மதி என்பது அவருக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஏனெ்னறால் மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த முறை தேனி போலீசார் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கடந்த மே மாதம் தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது அவர் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பாக சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் தேனி போலீசார் கைது செய்தனர். இதனால் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் எண்ணிக்கை என்பது 17 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே தான் 2வது குண்டர் சட்டம் பாய்வதற்கு முன்பாகவே சவுக்கு சங்கர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் சார்பில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‛‛சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது. இந்த ரிட் மனு இன்று உயர்நீதிமன்ற தலைமை சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ‛‛சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதனை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதுமட்டுமன்றி சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 17 வழக்குகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.