வெள்ளியை பகிர்ந்து கொடுக்க கோரிய வினேஷ் போகத்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அனுமதிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்த காரணத்தால், மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்த நிலையில் தீர்ப்பு ஆக.16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். அங்கு, உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில் வென்றால் தங்கம் கிடைத்திருக்கும். இப்படி இருக்கையில் 50 கிலோ எடை பிரிவில் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வினேஷ் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எடை குறைப்புக்காக வினேஷ் நேற்றிரவு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்கு பலனாக 1.85 கிலோ எடை குறைந்திருக்கிறது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 – 150 கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து அமெரிக்க வீராங்கனைக்கு தங்க பதக்கம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருக்கிறது. அதேபோல வினேஷ் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், இதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். விளக்கத்தை ஏற்காத இந்தியா கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

மறுபுறம், வினேஷின் தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அதில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால், தனக்கும் வெள்ளிப்பதக்கம் தர வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த முறையீட்டை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் ஏற்றதையடுத்து நேற்று விசாரணை நடைபெற்றது. விசாரணையில் வினேஷ் போகத் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் வாதாடியிருந்தனர். வாதத்தில், “பாரிஸில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனவே வினேஷ் தண்ணீர் குடித்திருக்கிறார். இதனால் வெயிட் ஏறியிருக்கும். மட்டுமல்லாது ஒரு நாளைக்கு 3 போட்டிகளை எதிர்கொள்கிறார். அதற்கு தேவையான அளவுக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் மனிதனின் அடிப்படை. எனவே இதை வைத்து தகுதி நீக்கம் செய்வது முறையானது அல்ல” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கின் தீர்ப்பு ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் அறிவிக்கப்படும் என்று சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று தீர்ப்பு குறித்த அப்டேட் வெளியாகியிருந்தது. அதாவது இந்த வழக்கில் ஆக.16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு துறையை சார்ந்தவர்கள் இது குறித்து கூறுகையில், “ஒருவருக்காக விளையாட்டின் விதிகளை மாற்றினால் நாளை ஒவ்வொருவருக்காகவும் இதை மாற்ற வேண்டி வரும். எனவே வினேஷின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளனர்.