சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது சந்திரயான் 3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேலுக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரியை சேர்ந்த செவிலியர் ஆ.சபீனாவுக்கும் முதல்வர் வழங்கினார்.
இதேபோல் முதலமைச்சரின் நல்ஆளுமை விருது பெற்றோர் விவரம்: தரவு தூய்மை திட்டம், முதல்வரின் முகவரித்துறை தலைமை தொழில்நுட்ப அதிகாரி டி.வனிதா, சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி – பொதுநூலகத்துறை இயக்குநர் கே.இளம்பகவத், மூளைச்சாவு கொடையாளியின் உறுப்பு கொடை – உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி, நான் முதல்வன் திட்டம் – தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோருக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருதுகள் பிரிவில் சிறந்த மருத்துவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஜா.விஜயலட்சுமி, சிறந்த நிறுவன சென்னையை சேர்ந்த வித்யாசாகர், சிறந்த சமூக பணியாளர் சென்னையை சேர்ந்த ம.சூசை ஆன்றணி, மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனமாக தூத்துக்குடியை சேர்ந்த சந்தானம் பேக்கேஜிங், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, சமூகநலத்துக்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருது பிரிவில் மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது சென்னையை சேர்ந்த மீனா சுப்ரமணியனுக்கும், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகளை கோவை மாநகராட்சி, திருவாரூர் நகராட்சி, சூலூர் (கோவை) பேரூராட்சி, சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலமாக 14-வது மண்டலம் ஆகியன விருதுகளை தட்டிச் சென்றன.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் பிரிவில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெ.கதிரவன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோஷன் ரெகோபெர்ட், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.ஜெயராஜ், செ.நிகிதா, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கவின் பாரதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ச.உமாதேவி, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கா.ஆயிஷா பர்வீன் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.