யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜராகி, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினார். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற அனுமதியளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டை உலுக்கிய சாதி ஆணவக் கொலை வழக்குகளில் ஒன்றான கோகுல் ராஜ் கொலை வழக்கும் ஒன்று. இந்த சம்பவம் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்தது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல் ராஜ், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் ஆவார். அவரும் சுவாதி என்கிற பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு வந்தார்கள். அங்கிருந்து கோகுல் ராஜ் சிலரால் சாதி ஆவணத்துடன் அடித்து இழுத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல் ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் பாதையில் மீட்கப்பட்டது. ”

இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ், அவரது ஓட்டுநர் அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரேஷ் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொடூர கொலை வழக்கில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணையின்போது முதல் நபராக குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தபேட்டி தான் முக்கிய சாட்சியாக மாறியது. இதன்படி முக்கியக் குற்றவாளியான யுவராஜ் உட்பட 10 பேருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. குறிப்பாக யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய பத்து பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது. சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரோன் ஆகிய ஐந்து பேரை விடுதலை செய்திருந்தது.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், உயர்நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.