அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக சனிக்கிழமை(ஆகஸ்ட்17) தொடங்கிவைத்தார்.
கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது மற்றும் விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டதுதான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம். 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 2016-ஆம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடா் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆய்வுப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ. 3.27 கோடியை ஒதுக்கினாா். அதைத்தொடா்ந்து அரசாணை வெளியிட்டாா்.
அவிநாசியில் 2017-ஆம் ஆண்டு ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பின்னா் ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து 2018-ஆம் ஆண்டு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு ரூ. 1,916.41 கோடி நிதியில் இந்தத் திட்டம் முழுமை அடைந்துள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் திட்டத்தை திறந்துவைக்கவில்லை என அதிமுக குற்றஞ்சாட்டி வந்தது. இந்தத் திட்டத்தை தொடங்க வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் கோவை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டத்தை விரைவில் தொடங்க உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு அமைச்சா் சு.முத்துசாமியிடம் அறிவுறுத்தினாா். இதனைத் தொடா்ந்து இந்தத் திட்டத்தின் தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு அருகில் முதலாவது நீரேற்று நிலையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட்17) நடைபெறும் என நீா்வளத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இந்தத் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பாா் என அமைச்சா் சு.முத்துசாமி பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் நிகழ்வின்போது வியாழக்கிழமை அறிவித்தாா்.
இந்த நிலையில், சோதனை ஓட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டிஎம்சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள், என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி நீரேற்று நிலையத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட துவக்க விழாவில் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் சா.மன்மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், ஏ.ஜி. வெங்கடாசலம், சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ். நாகரத்தினம், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.