அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்: எடப்பாடி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அரசியல் களத்தில் தினசரி புதிய புதிய ட்ரெண்ட்கள் உருவாகிக் கொண்டே தான் இருக்கும். திமுக மற்றும் கூட்டணிகள் கட்சிகள், அதிமுவை பாஜகவின் பி டீம் என்று விமர்சனம் செய்வது வழக்கம். ஆனால் ஆளுநர் தேநீர் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது, கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அண்ணாமலை கலந்து கொள்வது போன்ற சம்பவங்களால் அது அப்படியே பூமரங்காக திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருணாநிதி நூற்றாண்டு விழா நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அறிவித்தார். மேலும், ‘ஆளுநர் தேநீர் விருந்தில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்றும் கூறினார். உடனே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் தேநீர் விழாவில் கலந்துகொண்டார். ‘ஆளுநர் தேநீர் விருந்தில் அரசாங்கம் கலந்துகொள்ளும். திமுக கலந்து கொள்ளாது.’ என்று வேடிக்கையான விளக்கத்தையும் கொடுத்தனர். ஸ்டாலின் தான் திமுக தலைவர். துரைமுருகன்தான் பொதுச்செயலாளர். இருவரும் கலந்து கொண்டுவிட்டு, இரட்டை வேடம் போடுகின்றனர். கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்க வேண்டுமென்றால், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்து முதல்வர் பங்கேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே முதல்வர் தேநீர் விருந்தில் பங்கேற்றதற்கான காரணம். இதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. தமிழ், தமிழ் என்று முரசு கொட்டும் திமுக 100 ரூபாய் நாணயத்தில் இந்தி மொழி பொறித்திருப்பதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

டெல்லியில் தேநீர் விருந்து விழாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஏன் ராகுல் காந்தி கண்ணுக்கு தெரியவில்லையா. சென்னையில் கருணாநிதி சிலையை முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்தார். அவர் பாஜக தலைவராகவும், அமைச்சராகவும் இருந்தார். இப்படி பாஜகவைச் சேர்ந்த ஒருவரை வைத்துதான் திமுகவில் சிலையை திறந்தனர்.

அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தும் அவர்களை அழைக்கவில்லை. நாங்களே தான் வெளியிட்டோம். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதை யார் வெளியிடுவது என்பதுதான் கேள்வி. ஏன் ராகுல் காந்தியை அழைத்து வெளியிடவில்லை. ஆக இதில் இருந்து திமுக – பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

2014-19 காலகட்டத்தில் அதிமுக எம்பிக்கள் 37 பேர் இருந்தார்கள். காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அப்போது மத்திய அரசு அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கால தாமதம் ஏற்படுத்தியது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரும் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம். இப்போது திமுக மற்றும் கூட்டணியைச் சேர்ந்த 39 எம்பிக்களை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மாநிலத்துக்கு சாதகமாக குரல் எழுப்புகிறார்கள். ஏன் தமிழ்நாடு எம்பிக்கள் குரல் கொடுப்பதில்லை. திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் தமிழ்நாட்டை பற்றி எப்போதும் கவலை இல்லை.

அதிமுக ஆட்சியிலேயே முல்லை பெரியாறு அணை எந்தளவுக்கு வலுவாக உள்ளது என்பதை உறுதி செய்துவிட்டோம். இதற்காக உச்ச நீதிமன்றம் மத்திய அரசு அதிகாரிகள், தமிழ்நாடு – கேரளா பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பினர் அணையை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அணைக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு அந்த மாநில அரசும், எம்பிக்களும் எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை இல்லை. அதிமுக ஆட்சி இருக்கும்போதே உச்ச நீதிமன்றம் அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து 150 அடிக்கு உயர்த்திவிடலாம் என்று தீர்ப்பளித்தது. அணையை பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது கேரளா அரசு அதற்கு தடையாக இருந்தது. தமிழ்நாடு – கேரளா இரண்டு மாநிலங்களுக்கிடையே சுமூகமாக இருக்கும்போது, கேரள அரசின் அமைச்சர்கள், எம்பிக்களின் சிலரின் கருத்து வருத்தமளிக்கிறது. இது ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னை. தென் மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீருக்கு ஆதரமாக இருப்பது முல்லை பெரியாறு அணை நீர்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தனித்தன்மை இல்லை. அவர்கள் திமுக கட்சியில் இணைந்துவிட்டனர். அங்கு மக்களின் பிரச்னைக்கு யார் கொடுக்கிறார்கள். விலை வாசி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட எந்த பிரச்னை பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. பதவி அதிகாரத்துக்காக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மேம்பால பணிகளும் அதிமுக ஆட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. அத்திக்கடவு -அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அதிமுக ஆட்சியில் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அதை ஆமை வேகத்தில் கொண்டு சென்ற திமுக அரசு, தற்போது தான் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள், ரூ.54 கோடி செலவில் பாதி முடிந்த நிலையில், திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதே போல கோவை மேற்கு புறவழிச் சாலை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.