ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி பிரமுகரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சம்பாய் சோரன் கூறுகையில், தனக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் ஜேஎம்எம்-இல் கிடைக்கவில்லை என்றும், பல்வேறு அவமானங்களைச் சந்தித்துவிட்டதாகவும், இதன் காரணமாக, மாற்றுப்பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தான் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் கனத்த இதயத்துடன் பேசியதையும் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
என்னுடைய வாழ்வில் இன்றிலிருந்து புதியதொரு அத்தியாயம் ஆரம்பமாகிறது. என் முன் 3 வாய்ப்புகள் உள்ளன; ஒன்று, நான் அரசியலிலிருந்து விலக வேண்டும், இரண்டு, தனியாகக் கட்சி ஆரம்பிக்கலாம், மூன்று, எனக்கு துணையாக இந்த பாதையில் பயணிக்க யாரேனும் துணைக்கு வந்தால் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாம். எதிர்வரும் ஜார்க்கண்ட சட்டப்பேரவைத் தேர்தல் வரை, எனக்கு மேற்கண்ட அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அவற்றுள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.
கட்சியை காயப்படுத்தும் நோக்கம் தன்னிடம் இல்லை என்றும், எந்தவொரு கட்சி உறுப்பினரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும் தனது பதிவில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “ஒரு முதல்வராக நான் பொறுப்பு வகித்த காலத்தில் என் கடமையை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். நம்முடைய ரத்தமும் வியர்வையும் ஊட்டி வளர்க்கப்பட்ட கட்சியை காயப்படுத்தும் எண்ணம் ஒருபோதும் எழாது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும், விரைவில் அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்துள்ளேன். வதந்திகள் பரப்பப்படுவது குறித்து எதுவும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.